தீபம்
இரவு எட்டரை இருக்கும் நூலகத்திலிருந்து கிளம்பினான். எட்டு மணிக்கெல்லாம் உள்ளே வரும் வழியை அடைத்து விடுவார்கள் சுற்றிக் கொண்டு வெளியே வரும் வழியில் தான் வெளியே வர வேண்டும். பையை மாட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அங்கு எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தான் வழக்கத்துக்கு மாறாக நன்கைந்து பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். எப்போதும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூட வாயில் வரை கூட்டம் இருக்கும். அப்படி இருந்தால் நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை என்று அர்த்தம். ஆகவே இதற்கு முன் பேருந்து கடந்து வரவிருக்கும் அனைத்து நிறுதங்களிலும் இதே நிலைமை தான். இவனை வந்தடையும் போதே படியில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் புழுதிக் காற்றை முகத்தில் வாங்கியவாறும் நடுவில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்ற நிலையில்தான் இருப்பார்கள். எவ்வளவு வெண்ணெய் உண்டாலும் நிம்மதி அடையாத கண்ணனாய் இங்கு உள்ளவர்களையும் தன் வயிற்றில் ரொப்பியபடி பேருந்து செல்லும். அந்த வழியாக மொத்தமே இரண்டு பேருந்துகள் தான் வரும். நேராக சென்று இடப்பக்கமாக வளைந்து அடையார் மார்க்க...