Posts

Showing posts from February, 2026

மறைவின் வருகை

பாட்டா ஒருநாளும் என்னைத் தேடி வந்ததில்லை. ஆனால் எனக்கு பார்க்க வேண்டுமென்று தோன்றும்போது நிச்சயம் என் கண்ணில் தென்பட்டுவிடுவார். அப்படித்தான் அன்றொரு நாள் புரவிபாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து சேரும் சாலையின் ஓரமாக நின்றிருந்த பாட்டாவைப் பார்த்தேன். மேலாடையின்றி தலையில் உருமாலையும் இடுப்பில் வேட்டியும் அணிந்து, நரைத்திருந்த புருவத்தின் மீது வலது கையை வைத்து அண்ணாந்து கண்களை இடுக்கி வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாக நானும் பாட்டா பார்த்த திசையில் மேலே நோக்கினேன். நடுவானில் இருந்த சூரியனின் ஒளி, கண்களை கூசச்செய்து கண்ணீரைத் துளிர்க்கச்செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. சூரியனைச் சுற்றி ஒரு ஒளியாலான வட்டம் இருப்பது போலப்பட்டது. நான் பாட்டாவை நெருங்கினேன். ஆள் வரும் சத்தம் கேட்டு பாட்டா கைகளால் கண்களை கசக்கியபடி பார்த்தார். வருவது நானென அறிந்ததும் புன்னகையுடன் ‘இன்னைக்கு வட்டம் போட்டிருக்கு மழை வரும்’ என்றார். மீண்டும் மேலே வெளிச்ச வட்டத்தைப் பார்த்தேன். வெயில் பொழிந்துகொண்டிருந்தது. மழை வர்றது உறுதி என்றார். வட்டம் இருந்தா மழை வராதுன்னு தான அன்னைக்கு சொன்னீங்க...? அது ...

கவிதை

இருண்மையேயென்றான இரவு கொடுநடனமிடும் மாமழை பேரோசையென்றான நீர்த்தாளம்  நிருத்தியத்தில் கரைந்திடும் குட்டிப்பூனையின் கண்ணீரை காண்பதெப்படி காருண்யனே கணநேர மின்னலொளி அதை கம்பீர வேங்கையாக்குவதெப்படி  கார்வண்ணனே

மதிலுகள்

நீ பீரு தான குடிப்ப, பீருக்கு பன்னிக்கறி தான் நல்லா ஒணத்தியா இருக்கும். கால் கிலோ வறுவல் எம்பது ரூபா தான். ஒயின்சாப்புக்கு போற வழிலயே கடை இருக்கும் பாத்துருக்கேன். நான் பீரு குடிச்ச காலத்துல வாங்கித் திம்பேன். இந்த தடவ வாங்கிட்டு போவோம். எனக்கு ஒரு குவாட்டர் பத்தாதுதான் இருநதாலும் அதுக்கு மேல போனா வீட்டுல கண்டுபுடிச்சுடுவாங்க. டம்ளர் அப்புறம் மத்ததெல்லாம் அந்த செட்டி  கடைல வாங்கிக்கலாம். அப்புடியே போற வழில அவள பாத்துட்டு போலாம் என்று ராம் அடுக்கிக் கொண்டே போனான். நான்காம் வகுப்பு படிக்கும் போது ஐயனாரப்பன் கோவிலில் பன்றியை ஈட்டியால் குத்தி பலி கொடுத்துவிட்டு அந்த கோவிலைச் சேர்ந்த குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக பன்றியை வளர்த்தவர்கள் வீட்டிலேயே கூறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை "நீங்க இங்க நிக்குறத பாத்தா அப்பா என்னையதான் ஏசுவாரு" என்று  பன்றியை வெட்டிக் கொண்டே முனுசாமி சொன்னார்.  நான் அந்த தெருவுக்கு சென்றதை அப்பாவிடம் யார் முன்னிலையிலாவது பார்த்தவர்கள் வந்து கூறினால்,  அம்மாவும் என்னுடன் சேர்ந்து அப்பாவிடம் ஏச்சு வாங்...

அழைப்பு

கடைசியாக ஒருமுறை ருசியாக வயிறு முட்ட சாப்பிடலாம் என்று நல்ல கடையொன்றை தேடி நடந்தான். அண்டாவை தட்டும் சத்தமும் மசாலாவில் மினுக்கும் பீப்-உம் அதனுடன் இணைந்த பிரியாணி வாசமும்  நாவில் எச்சிலை சுரந்தது. அந்த உணவத்தில் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த ஒருசிலரும் பில் கொடுத்துவிட்டு செல்ல இவனும் அங்கு பரிமாறும் சிலரும் மட்டுமே இருந்தனர். அவர்களையும் உள்ளே சென்று சாப்பிட சொல்லிவிட்டு கல்லாவிலிருந்தவர் அவனை நோக்கி வந்து சாப்பிட என்ன வேண்டுமென கேட்டார்.  ஒரு சிறிய பித்தளை பாத்திரத்தில் பிரியாணி அவன்முன் வைக்கப்பட்டது. மணி மூன்றரை ஆகியிருந்தது. முந்தையநாள் மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் பித்தளை பாத்திரத்தில் இருந்த பிரியாணியை ஸ்பூனால் இலையில் தள்ளும் போது கையில் சிறிது நடுக்கம் இருந்தது. ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது ஏதோ நினைவுக்கு வந்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்து சுவரில் ஒட்டியிருந்த விலைப்பட்டியலை கண்டடைந்து கண்களை அதில் ஓட்டினான். பீப் பிரியாணி – ரூ.160.  மிச்சம் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது ரூபாய். பயணத்தொகை போக கையிலிரு...