தீபம்

இரவு எட்டரை இருக்கும் நூலகத்திலிருந்து கிளம்பினான். எட்டு மணிக்கெல்லாம் உள்ளே வரும் வழியை அடைத்து விடுவார்கள் சுற்றிக் கொண்டு வெளியே வரும் வழியில் தான் வெளியே வர வேண்டும். பையை மாட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அங்கு எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தான் வழக்கத்துக்கு மாறாக நன்கைந்து பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். எப்போதும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூட வாயில் வரை கூட்டம் இருக்கும். அப்படி இருந்தால் நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை என்று அர்த்தம். ஆகவே இதற்கு முன் பேருந்து கடந்து வரவிருக்கும் அனைத்து நிறுதங்களிலும் இதே நிலைமை தான். இவனை வந்தடையும் போதே படியில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் புழுதிக் காற்றை முகத்தில் வாங்கியவாறும் நடுவில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்ற நிலையில்தான் இருப்பார்கள். எவ்வளவு வெண்ணெய் உண்டாலும் நிம்மதி அடையாத கண்ணனாய் இங்கு உள்ளவர்களையும் தன் வயிற்றில் ரொப்பியபடி பேருந்து செல்லும். அந்த வழியாக மொத்தமே இரண்டு பேருந்துகள் தான் வரும். நேராக சென்று இடப்பக்கமாக வளைந்து அடையார் மார்க்கமாக செல்லும் பேருந்து ஒன்றும் வலபக்கமாக திரும்பி கிண்டி மார்க்கமாக தாம்பரம் பெருங்களத்தூர் வரை செல்லும் பேருந்து அவ்வளவு தான். 


அன்று ஏனோ கூட்டமில்லை என்பது தூரத்தில் நடந்து வரும் போதே தெரிந்தது. வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்வதற்கு திறன் பேசியிலேயே முன் பதிவு செய்துவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தான். இன்று புதன். போக்குவரத்து துறைக்கு நூலகம் வந்து செல்பவர்கள் மேல் கருணை பிறந்து விட்டதா என்று கூட யோசிக்கலானான். நடந்து வந்து கொண்டிருக்கும் போதே பேருந்து வருவது தெரிந்தது. நடந்து சென்று பேருந்து கிளம்பும் போது கையை காட்டினால் நிறுத்தாமலே போய் விடுவார். ஓடி வருவது போல் பாவலா காட்டினால் தான் நம் மேல் கருணை கூர்ந்து பேருந்து நிற்கும். ஓடவும் செய்யாமல் நடக்கவும் செய்யாமல் நடையோட்டமாக வந்து முன் பக்கத்தில் பேருந்தில் ஏறினான். வலபக்கமிருந்த ஆண்கள் இருக்கைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. இடப்புறமிருந்த பெண்கள் இருக்கைகளில் இருக்கைக்கு ஒன்றாக சன்னலோரமாக ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு பெண் இருந்தார்.  ஆண்கள் இருக்கையில் ஒரு பெண் இருந்தாலே பக்கத்தில் உட்காராமல் நின்று கொண்டே வருவான் இப்போது கேட்கவா வேண்டும். நடத்துனர் கூட டிக்கெட் கொடுத்துவிட்டு அமர்ந்து விட்டார். கம்பியோடு கம்பியாக இவன் மட்டும் நின்று கொண்டு வந்தான். திடீரென்று அவனை யாரோ அழைப்பது போல் இருந்தது. 

இங்க வந்து உக்காருங்க

தனது துப்பட்டவால் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களை போல் தனது முகத்தை மறைத்து கண்கள் மட்டும் காட்சியளித்தன. இந்த குரலில் ஏனோ பரிச்சயம் இருப்பது போல் தோன்றியது. எதுவும் பேசாமல் அவள் அருகில் போய் அமர்ந்தான். அவன் அமர்ந்ததும்  திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் புன்னகை புரிவது அவள் கண்களில் தெரிந்தது. ஒரு வித எச்சரிக்கை உணர்வோடு பதில் புன்னகை புரியாமல் தேங்க்ஸ் என்றான்.

பரவால்ல


இரண்டு கால்களையும் குறுக்கி தொடை மீது தனது பையை வைத்து கைகளையும் அதன் மீது ஊன்றி குளிரில் நடுங்கி கொண்டிருப்பவன் போல ஒடுங்கி அவளருகில் அமர்ந்து கொண்டு வந்தான். முகம் முழுதும் மூடியிருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் போல்இருந்தது. அவள் மீதிருந்து வியர்வை கலந்த நறுமணம் எழுந்தது.

திரும்பி அவளை  பார்த்தால் கண்டிப்பாக அவளுக்கு தெரிந்துவிடும்.

சன்னல் வழியாக பார்ப்பது போல்அவளைப் பார்க்கலாமா?

இல்லை வேண்டாம். 

அவள் தானே வந்து உட்கார சொன்னாள். உட்கார்ந்ததும் நம்மை பார்த்து சிரித்தது போல் இருந்ததே.  அவளிடம் பேச்சு கொடுக்கலாமா?

எப்படி ஆரம்பிப்பது

பேருந்து வலப்பக்கம் வளைந்து அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி சென்றது. 

பேச்சு கொடுத்து நம்மிடம் சரியாக பேசவில்லை என்றால்?

மற்றவர்களைப் போல தன்னையும் பெண்களிடம் வழியும் ஆசாமி என்று நினைத்துக்கொண்டால்?

சரி. அவள் ஏதாவது குறிப்புணர்த்தினால் பேசலாம் என்று ஆர்வத்தை அடக்கிக்கொண்டு வந்தான். அடுத்த நிறுத்தத்தில் ஆண்கள் பக்கமிருந்த இருக்கை காலியாகியது.


இன்னும் இவள் அருகிலேயே அமர்ந்திருந்தால் தவறாக நினைத்துக் கொள்வாளா அல்லது இருக்கை மாறி அமர்ந்தால் நின்று கொண்டிருந்த போது அவள் மட்டும் அழைத்து அருகில் அமர சொன்ன உதவியை அவமானம் செய்தது போலாகி விடுமா

இதை யோசித்துக் கொண்டிருக்கையில் அவளுடன் பேச வேண்டும் என்பதையே மறந்து விட்டான். திடீரென தன்னுணர்வு பெற்று திரும்பினான். அவள் அவனை பார்த்து கொண்டிருந்தாள். இவன் திரும்பியதும் இறங்கனும் என்றாள்.

அவள் இறங்க போவதாக சொன்னதும் அவளிடம் ஏதாவது பேச வேண்டுமே என்று மீண்டும் மனது பட படத்தது. ஏதேதோ பேச விழைந்து ஒன்றும் நாவில் அகப்படாமல் மீண்டும் தேங்க்ஸ் என்றான்.

பரவால்ல. அந்த கண்கள் குறும்பாக அவனை பார்த்து சிரிப்பதை உணர்ந்தான். ஒரு மீனின் துள்ளலுடன் அவள் கண்கள் இருந்தது. சட்டென்று எழுந்து வழி விட்டான். 

அடர் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு நிறத்தில் துப்பட்டாவை முகத்தில் கட்டியிருந்தாள். சிவப்பு நிறத்தில் போட்டிருந்தால் இன்னும் அவளுக்கு நன்றாக இருக்கும் என தோன்றியது. முடி தொடை வரை நீண்டிருந்தது. அவள் இருக்கையிலிருந்து எழுந்து சென்று இறங்கிய போதுஅவன் பார்த்த இவை மட்டும் தான் அவளது உருவமாக மனதில் தங்கியது. அவள் இறங்கிய பின்பு அவள் பார்கிறாளா என்று அவளையே பார்த்தான். ஒரு நொடி தான் சட்டென்று அவள் கண்கள் இவனை உரசி விட்டு சென்றது. கிண்டியில் இறங்கி வடபழனி செல்வதற்காக மாறினான்.

அவள் சென்ற பின்பு அவன் செயல்களை நினைத்து பார்த்தான். அவனுக்கே சற்று நாணமாக இருந்தது. சிரித்துக் கொண்டே பேருந்தில் இருந்து இறங்கி நடந்தான். நாளை எப்படியும் அவளிடம் பேசி விடுவது என தன்னிடமே சூளுரைத்துக் கொண்டான். 

நாளை அவள் வராவிட்டால்

நிச்சயம் தனக்காக அவள் வருவாள் என்று அவனுக்கு தோன்றியது.

அடுத்த நாளும் அதே நேரத்திற்கு சென்றான். அவன் ஏறும் அதே நிறுத்தத்தில் எறினாளா இல்லை அதற்கு முன்பே ஏறினாளா. நேற்று ஓடி வந்து எறியத்தில் அவன் கவனிக்கவில்லை. பேருந்துக்காக காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் எதிர்பார்ப்பும் பதற்றமும் அதிகரித்தது.

ஒரு வழியாக பேருந்து வந்தது. ஏறியதும் பெண்கள் பக்கம் பார்த்தான். அதில் இருந்த சொற்ப பெண்களை கூர்ந்து கவனித்தான். அந்த கண்களை காணவில்லை. சிறிது நேரம் கழித்துதான் இடம் இருப்பதை கவனித்து அமர்ந்தான். நேரத்தை பார்த்தான் நேற்று வந்த அதே நேரம் தான் அதில் மாற்றம் இல்லை. அப்படியானால் அவள் கண்டிப்பாக இன்று வந்திருக்க வேண்டுமே. 

வலது கையை முன் பக்க இருக்கையில் வைத்து அதன் மீது தலையை சாய்த்து கண்களை மூடினான். அவன் உலகம் இருட்டியது. நேற்றே அவளிடம் சூட்டோடு சூடாக ஏதாவது பேசியிருக்கலாம். இன்று வந்திருந்தலாவது சூடு ஆறுவதற்குள் ஏதாவது பேசியிருக்கலாம். நாளை ஊருக்கு போய்விட்டால். அதன் பிறகு பார்த்தால் கூட என்னவென்று பேசுவது. நாளை முன் பதிவை இரத்து செய்து விடலாமா என்று கூட யோசித்தான். அவன் கண்களை திறந்த போதும் அவன் உலகம் இருட்டகவே இருந்தது. அவள் இறங்கும் ஸ்டாப் வந்ததும் ஒரு முறை சுற்றி முற்றி பார்த்தான். அவள் நிஜமாகவே வரவில்லைதான். கவலை தோய்ந்த முகத்துடன் கிண்டியில் இறங்கினான். அவள் ஏன் வரவில்லை என்று யோசித்தவன் தற்போது அவள் வருவாள்என்று எப்படி நம்பினோம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அவள் வருவாள் என்று நம்பியிருக்கக் கூடாது.

அடுத்த நாள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறிய பின்பு கூட அவள் இருக்கிறாளா என்று தேடினான்.

ச்சே, என்ன முட்டாள்தனம் இது.

அவள் நம்மை பற்றி யோசிப்பாளா?

அன்று இரண்டாவது முறை தேங்க்ஸ் சொல்லியதும் நான் அவளுடன் பேச ஆவலாய் இருந்ததை கண்டு பிடித்திருப்பாளா?

கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

அவளுடைய அந்த குறும்பு பார்வையே அதற்கு சாட்சி.

அவள் பெண் என்பதாலேயே அவளுடன் நிறைய பேர் பேச முயற்சி செய்திருப்பார்கள். அவளுக்கு இதை தெரிந்து கொள்வதெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது. அதுவும் அந்த கண்களில் வீசிய ஒளி!

ஊருக்கு சென்றவனின் மனம் எதிலும் ஈடுபாடு கொள்ளவில்லை. மற்ற ஆண்களை போலவே அவனும் கண்களை திறந்திருக்கும் போது மட்டும் அவள் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்தான். அடுத்த நாள் கண்களை திறந்து கொண்டும் கனவு காண ஆரம்பித்தான். திங்கள் கிழமை சென்னை வந்ததும் மாலை நூலகத்தில் சன்னலின்அருகில் அமர்ந்து கொண்டு பொழுது எப்போது சாயும் என்று காத்துக் கொண்டிருந்தான். கதிரவனின் ஒளி பல விதமான வண்ண பிரிகைகளை வானத்தில் நிகழ்தியது. ஒரு ஓவியன் சிவப்பு நிறத்தை பல வித அடர்வுகளில் கலந்து திரையில் கொட்டியது போன்று இருந்தது வானம். வெண்ணிற இரவுகள் புத்தகம் வெறுமெனஅவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு விதமாக பொழுது சாய்ந்துவிட்டது. எட்டு மணிக்கெல்லாம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான். மணி எட்டே கால் இருக்கும். பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் சேர ஆரம்பித்தது. தென்றலில் ஆடும் சுடர் போல மெதுவாக அசைந்து வந்தாள். அதே கண்கள் தான். இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். அவளே தான். இவனை நோக்கி நடந்து வந்தாள். அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்த விஷயங்கள் மனதுள் பிரவாகமாக எழுந்து வந்தன. ஆனால் நாவிலிருந்து வார்த்தை எழவில்லை. அவள் அருகில் வந்து நின்று இவனைப் பார்த்து அவளது நாணத்திலிருந்து ஒரு துளியை புன்னகையாக உதிர்த்தாள்.

உன்னோட பேரென்ன

மீனா

அவன் உலகம் விடிந்துவிட்டது.







Comments

Popular posts from this blog

மறைவின் வருகை

ஹெமிங்வே கவிதைகள்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து