பாதர்

மாரிமுத்து இதுவரை பார்த்த அனைத்து பள்ளிகளைப் போன்றுதான் அவன் பள்ளியும்  "ப" வடிவில் இருந்தது. ஆனால் மூன்று கோடுகளும் இணைக்கப்படாமல் இடைவெளியுடன் இருக்கும். "ப"னாவில் இரண்டு செங்குத்துக் கோடுகளும் ஓடு போட்ட கூரைகளைக் கொண்ட கட்டிடங்கள். பழமையின் காரணமாக ஓட்டின் சிவப்பு நிறம் வெளிர்த்திருந்தது. சுவர்கள்  சுண்ணாம்பு பூசப்பட்டு புதிதாக இருக்கும். இதைப் பார்க்கும் போது  இளநரை கொண்ட சயின்ஸ் வாத்தியார் தயிர்சட்டி எனும் தங்கராசுவின் நியாபகம் தான் அவனுக்கு வரும். காலையில் எட்டு மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். எட்டிலிருந்து எட்டே காலுக்குள் எப்போது வேண்டுமானாலும் மினிபஸ் வரும். இரண்டு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட். தினமும் ஏழு ரூபாய் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது சட்டைப் பையிலோ அல்லது பென்சில் பாக்ஸிலோ அம்மா வைப்பார். வீட்டிலிருந்து இடப்பக்கம் நோக்கி பிரியும் சாலையில் நேராக சென்றால் நான்கு கிலோமீட்டரில் பள்ளிக்கூடம் வந்துவிடும். பேருந்து  எங்கும் திரும்ப தேவை இல்லை. ஆனால் மினி பஸ்ஸோ பேருந்து வசதியில்லாத பல ஊர்களுக்குள்ளும் சென்று பள்ளியை அடையும் போது எட்டே முக்கால் அல்லது எட்டு ஐம்பது ஆகிவிடும். பேருந்து நிறுத்தத்திலிருந்து வேகமாக நடந்தால் மணி அடிப்பதற்குள் வகுப்பறைக்கு சென்று விடலாம். அவன் பள்ளி இருக்கும் ஊரில் ஒரே ஒரு டீ கடை மட்டுமே இருந்ததாகவும் "இந்த பாதர் வந்து  சர்ச்சு பள்ளிக் கூடம் ஆஸ்பத்திரி எல்லாம் கட்டுனதுக்கு அப்புறம் தான் இந்த ஊரே மாறி போனதாகவும்" பல முறை யார் யாரோ சொல்லி கேள்விப் பட்டிருக்கிறான். 

பள்ளி முடிந்ததும் மினி பஸ் தாமதமாக வரும் சமயங்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்படி கூட்டம் அதிகமாக இருந்தால் அவனும் அக்கம்பக்கத்து வீட்டில் இருக்கும் பையன்களும் ஐந்தரைக்கு வரும் பேருந்தில் ஏறி வர வேண்டும். அதில் டிக்கெட் மூன்று ரூபாய் ஐம்பது பைசா. நாலு கிலோமீட்டர் வழியில் கால் மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடும். ஆனால் கூட்டம் இல்லை என்றாலும் அவனும் அவன் கூட்டாளிகளும் சைக்கிளில் அல்லது நடந்து வரும் உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு ஐந்தரை வண்டியைத் தான் பிடிப்பார்கள். இதனால் தினமும் ஒரு ரூபாய் மீதம் கிடைக்கும். விளையாடவில்லை என்றால் ஆரோக்கிய ஜெயபால் அண்ணன் கடையில் முகாமிடுவார்கள்.  அவர் மாரியின் நெருங்கிய நண்பனான பீட்டரின் மாமா. பாதர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்.

 பாதர் இங்க வந்த இரண்டு வருசத்துல வெள்ளக்காரன் சுகந்திரம் குடுத்துட்டுப் போய்ட்டான்டா. அப்ப அவருக்கு வயசு பதினெட்டு தான். ஆனா சுகந்திரம் குடுத்தவனும் நம்ம பாதரும் ஒரே நாடு இல்ல. பாதர் ஆளுங்க பாண்டிசேரில இருந்தாங்க. அவங்களும் கொஞ்ச வருசத்துல திரும்பி போய்ட்டாங்க. ஆனா பாதர் இங்க இருந்து வர மாட்டேனு சொல்லிப்புட்டாரு. பாதர அவுங்க வீட்டு ஆளுக திரும்பி வர சொல்லி கூப்புட்டும் இவரு போவாம இருந்ததால இவரு ஊழியம் பண்ண காசு அனுப்ப மாட்டனு சொல்லிப்புட்டாங்க. அப்ப தான் அவரு திரும்பி வருவாருனு அவங்களுக்கு நெனப்பு. ஆனா நம்ம பாதரு என்ன செஞ்சாரு தெரியுமாடா என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் மௌனமாக எங்கள் முகங்களைப் பார்ப்பார். யாரும் செய்திடாத பெரிய தியாகத்தை நேரில் கண்ட சாட்சியமாக இருப்பவர் போல அவர் முகம் மாறிவிடும். அவங்க நாட்டுல இவருக்கு இருந்த திராட்சை தோட்டத்த வித்து இந்த பள்ளிக்கோடத்த கட்டுனாருடா. இப்ப அவரு வயசு எழுபத்தைந்து. 

இந்த கதைகளை அப்பாவிடம் சொன்ன போது அதெல்லாம் சும்மா,  நம்பாத என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார். ஆனால் அவனால் முழுமையாக நம்பாமல் இருக்க முடியவில்லை. இப்போது ஏழாவது படிக்கிறான். இந்த ஏழு வருடங்களில் பாதர் நூவே அவர்கள் கடுமையாக எவரிடமும் பேசி அவன் பார்த்தில்லை. அந்த பள்ளியில் படிக்கும் அனைவரிடமும் அவர் பேசியிருக்கிறார். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தரச் சான்றிதழை அவரே ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று தருவார். அன்று அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.  புதிதாக பார்ப்பவர் எவரும் அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்.

 மூப்பினால் முன் ஏறிய நெற்றி. பழுப்பு நிற பிரேம் போட்ட புட்டிக் கண்ணாடி. தாடி அவருக்கு முளைத்ததா இல்லையா என்று தோன்றும்படிக்கு எப்போதும் சவரம் செய்யப்பட்ட முகம். இளஞ்சிவப்பு நிறத்தில் கருணையே உருவான அவரது முகம். எப்பொழுதும் வாசனை பரப்பியபடி இருக்கும் வெண்ணிற அங்கி. வெள்ளி முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரம். தோலில் செய்யப்பட்ட கருப்பு நிற பூட்ஸ். ஆறு அடி உயரம். வலுவான உடல் வாகு. இது தான் பாதர் நூவே.

அவர் தரச்சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்தால் அந்த வாரம் முழுவதும் அவருக்கு வேறு வேலைகளுக்கு பள்ளி நேரத்தில் இடமில்லை. அவரது தமிழ் ஒருவாறு கொழ கொழ என்று இருக்கும். வயதின் காரணமாகவும் இருக்கலாம். ஒரு சில முறைகள் அவரது கேள்விகள் மாணவர்களுக்கு புரியாது. அந்த சமயத்தில் ஆசிரியர்கள் ஏன் பெயிலாயிட்டனு உங்கிட்ட கேக்குறாறு என்று சொல்ல மாட்டார்கள். ஏன் பெயிலாட்டார்னு கேட்டா பதில சொல்லாம என்ன பராக்கு பாத்துட்டு இருக்க என்று கோவமாக கேட்பார்கள். 

இவ்வளவு நாட்களாக மினி பஸ்ஸில் வந்ததில் அதில் போடப்படும் பாடல்கள் இவனுக்கு நன்கு பரிட்சயமாயிருந்தன. முச்சந்தியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஜெயபால் அண்ணன் கடை. பேருந்து நேராக சென்று விடும்.மளிகை சாமான்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு பள்ளிக்கு செல்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் பள்ளி. பள்ளிக்கு பின்புறத்திலேயே சர்ச். சர்ச்சினை ஒட்டி பாதர் நூவே அவர்கள் வசிக்கும் இடம். அதனை வீடு என்று சொல்லிவிட முடியாது.  அடித்து பிடித்து மணி அடிப்பதற்குள் வகுப்பறைக்குள் நுழைந்தால் அவனது பெஞ்சில் ராம் இருப்பான். பீட்டர் ஜான்சுதனின் பைகள் இருக்கும். அவர்கள் மறைக்கல்வி வகுப்புகளுக்கு சென்றிருப்பார்கள். ஒன்பதிலிருந்து ஒன்பதரை வரை. அந்த நேரத்தில் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான கிறிஸ்துவர் அல்லாத மாணவர்களுக்கு நல்லொழுக்க கல்வி வகுப்பு நடைபெறும். அவை அந்தந்த வகுப்பாசியர்களாலேயே நடத்தப்படும். மாரியின் வகுப்பாசிரியர் தங்கராசு வர தாமதமானால் மாரியின் வகுப்புக்கு உடற்கல்வி ஆசிரியர் மேரி வருவார். மாணவர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு கிறிஸ்துவ பாடல்கள் பாடிக் காட்டுவார். அவர் பாடும் 
"ஊற்றுமையா உன் வல்லமையை
 தாகத்தோடு காத்து நிற்கிறேன் -நான்"
என்ற பாடல் மாரிக்கு மிகவும் பிடித்தமானது.  அந்த பாடலைப் பாடும் போது மேரி டீச்சரின் முகபாவங்கள் அவனுக்குள்ளும் ஒரு பக்தி நிலையை ஏற்படுத்த தவறுவதில்லை. ஒன்பதரை மணிக்கு பிரேயர். ஒன்பதாம் வகுப்பைச் சார்ந்த மூன்று மாணவர்கள் மேடையில் நிற்க முதலில் நிற்கும் மாணவர் முன் வந்து உறுதி மொழியைக் கூற மற்றவர்கள் உள்ளங்கை தரையைப் பார்த்தவாறு வலது கையை நெஞ்சோடு வைத்து உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அதற்கடுத்து தமிழ்தாய் வாழ்த்து. அது முடிந்ததும் இரண்டாவது மாணவர் பைபிள் வசனத்தை படிப்பார். உறுதி மொழி பைபிள் வசனம் கூறும் மாணவர்கள் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலான கிறிஸ்துர் அல்லாத மாணவர்களின் வீடுகளில் பைபிள் வசனம் வாசிக்க செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டிருக்கும். ஆனால் அந்த அறிவுறுத்தல்களில் கண்டிப்பு இருக்காது மற்றும் அது பெயரளவிற்கான அறிவுறுத்தல்தான். மூன்றாவதாக இருக்கும் மாணவர்  அன்றைய நாளிதழில் வந்த முக்கியமான செய்தி என உடற்கல்வி ஆசிரியர் கருதி குறித்துக் கொடுத்த செய்திகளை நோட்டில் எழுதிக் கொண்டு வந்து வாசிக்க வேண்டும். செய்தி வாசித்ததும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தலைமையாசிரியர் மனோஜ் லாரன்ஸால் கொடியேற்றப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் தேசிய கீதம் பாடப்படும். மற்ற நாட்களில் செய்தி வாசிப்புடன் பிரேயர் நிறைவுறும்.

 பிறந்த நாளன்று வேற்று மதமாக இருந்தாலும் பாதரிடம் சென்று ஆசி பெற்று வருவது காலப் போக்கில் புனித பௌல் பள்ளி மாணவர்களிடையே ஒரு சம்பிரதாயமாகவே மாறி விட்டிருந்தது.  பாதரிடத்தில் சென்று தனக்கு பிறந்த நாள் என்று கூறினால் நெற்றியில் சிலுவையிட்டு  தலை மீது அவரது வலது கையை வைத்து அவர்களுக்காக ஒரு நிமிடம் கண்களை மூடி ஜெபிப்பார். அவ்வாறு தமக்காக பாதர் ஜெபிக்கும் போது எழும்  ஒருவித பரவசத்திற்காகவே உணவு இடைவேளைகளில் சர்ச்சில் மாணவர்களுக்காக காத்திருக்கும் பாதரை தேடி செல்வார்கள். எவ்வளவு பெரிய மனிதர் தமக்கு ஆசி வழங்குவதற்கென்றே காத்திருந்து  தமக்காக கடவுளிடம் ஜெபிப்பதை பார்க்கும் போது யாராக இருந்தாலும் இந்த பரவசம் தோன்ற தான் செய்யும். மருத்துவமனை மற்றும் பள்ளியின் நிர்வாத்தை கவனிக்கவும் சர்ச் வேலைகளைப் பார்க்கவுமே வாரத்தில் ஏழு நாட்கள் போதாது. மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சைக்கு வருபவர்களிடமும் மருத்துவமனையில் அட்மிட்டாகி குணம் பெற்று செல்பவர்களிடமும் அவர் காட்டும் கனிவைப் பற்றி கூட ஏராளமான கதைகளை ஜெயபால் அண்ணன் கூற கேள்விப் பட்டிருக்கிறான்.

நான் சின்ன பையனா இருந்தப்போ சாயந்திர நேரத்துல எங்கப்பா கட்டட வேல செஞ்சிட்டு சாரத்துல இருந்து சறுச்சு உளுந்துட்டாரு. இந்த சுத்து வட்டாரத்துலயே நைட்டு தொறந்து இருக்குற ஆஸ்பத்திரி இது ஒன்னு தான். ஆளுங்க தூக்கிட்டு போறப்ப உசிர கைல புடிச்சுட்டு இருந்தாரு எங்கப்பா. டாக்டருங்க வந்து வைத்தியம் பாத்து கட்டுலாம் போட்டுட்டு போனாங்க. நானும் எங்கம்மாவும் அவரு பக்கத்துல உக்காந்துருந்தோம். அப்ப தான் பாதர் வந்தாரு. மொத கட்டிலலே நாங்க இருந்த கட்டிலு தான். அவரு கிட்ட வரும் போது மீன் கொளம்பு வாசம் வந்தது இன்னமும் நியாகம் இருக்குது. பாதரு வந்து எஙகப்பாவ தொட்டு பிரார்த்தன பண்ணினாரு அது வர அழுதுட்டு இருந்த எங்கம்மா பாதர் பிரார்த்தன பண்ணும் போது ஆண்டவரே காப்பாத்துமையானுட்டு முழங்கால் போட்டு வேண்டிக்கிட்டு இருந்தாங்க.  எங்க மூனு பேருக்கும் நெத்தில சிலுவ போட்டுட்டு அம்மா கிட்ட ஆறுதல் சொல்லிட்டுப் போனாரு. அப்பா சொகமானதுக்கு அப்புறம் பாதர் வந்து பிரார்த்தன பண்ணும் போது ஏசப்பாவே நேருல வந்து குணமாயிடும்னு சொன்னாப்புல இருந்துச்சு. அது வர நா செத்து போயிட்டா உங்கள யாரு காப்பாத்துவாங்கனு பயந்துட்டே இருந்தேன். அதுக்கப்புறம் தான் எனக்கு தெகிரியம் வந்துச்சுனு அடிக்கடி அப்பா சொல்லுவாரு என்று இவர்களிடமே இந்த கதையை ஜெயபால் அண்ணன் பல முறை கூறியுள்ளார். 

பீட்டரின் வீட்டின் அருகிலே வாய்க்கால் ஓடும். காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டும் வாய்க்காலில் தண்ணீர் ஓடும் மற்ற சமயங்களில் வறண்டு காணப்படும். மாரி தன் ஊரின் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்ட பிறகு எப்போது வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் விடுமுறை தினங்களில் காலையிலேயே கபடி விளையாட போவதாக சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு பீட்டரின் வீட்டிற்கு வந்து விடுவான். பீட்டரின் ஊரில் கபடி மிகப் பிரசித்தம். பொங்கல் பண்டிகையன்று நடக்கும் கபடி போட்டிகளில் பங்கேற்க தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் வருவார்கள். மாரியின் ஊரில் அவனது நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். மாரி பீட்டர் மற்றும் அக்கம் பக்கத்திலுள்ள பையன்கள் சிலரும் கபடி விளையாடி முடித்துவிட்டு வாய்க்காலில் நீந்தி விளையாடுவார்கள். எல்லாம் முடிந்து பீட்டரின் வீட்டிற்கு வருகையில் அப்போது தான் சமையலை முடித்து இவர்களின் வருகைக்காக பீட்டரின் அம்மா காத்திருப்பாள். மாரிக்கு பசி குடலைத் தின்னும். பீட்டரின் குடிசையின் அருகே வரும் போதே மீன் குழம்பின் வாசனை பசியை மேலும் உக்கிரமாக்கும். ஞாயிற்றுக் கிழமை விடியற் காலையிலேயே காவிரிக்குச் சென்று அப்போது பிடித்து வலையில் கட்டி ஆற்றில் போட்டு உயிருடன் வைக்கப்பட்டிருக்கும் மீன்களை  பீட்டரின் அப்பா வாங்கி வருவார். குடிசைக்குள் நுழைந்ததும் கைய கழுவிட்டு வாங்கடா சாப்பாடு ஆறிட போது என்று அழைக்கும் பீட்டரின் அம்மா வேண்டாம் என்று மறுக்கும் மாரியை கடைசியில் இரண்டு துண்டு மீன்களையாவது சாப்பிட வைத்து விட்டு தான் அனுப்புவாள்.வாய்க்காலில் விளையாடியதை கண்டுபிடித்து விட்டால் அடி விழும் என்ற பயத்தில் செல்லும் மாரிக்கு இங்கு சாப்பிட்டு விட்டு தன் வீட்டில் சாப்பிடாவிட்டால் விழும் ஏச்சுகளை நினைக்கும் போது அந்த இரண்டு துண்டு மீன்களும் வயிற்றில் இறங்காது. பசி மயக்கத்திலேயே சைக்கிளை தன் வீட்டிற்கு விடுவான். 

அந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படித்தான் வாய்க்காலில் விளையாடி சிவந்திருந்த அவன் கண்களைப் பார்த்ததும் அடி விழுந்தது. அடி வாங்கிவிட்டு படுக்கையில் படுத்திருந்த அவனைத்த தேடி அதே ஊரில் வசிக்கும் மாரியின் அப்பாவின் தங்கைமகள் மீனா வந்திருந்தாள். மீனா அவர்கள் ஊரிலே இருக்கும் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

அத்த மாரி எங்க? 

தொர உள்ள படுத்துட்டிருக்காரு

மீனாவின் குரலைக் கேட்டதும் கண்களை வேகமாக  துடைத்துக் கொண்டு எழுந்து வெளியே வந்தான். அவன் முகத்தைப் பார்த்ததும் மீனா அடிவாங்கி அழுதிருப்பதை புரிந்து கொண்டாள். 

அஞ்சாங்கல்லு ஆடலாமா

பதிலேதும் சொல்லாமல் மீனா வீட்டை நோக்கி நடந்தான். மீனா அவன் பின்னால் நடந்தாள். வேகமாக நடந்து மாரியின் அருகில் வந்து பீட்டர் வீட்டுக்கு போனியோ என்றாள். அவன் முறைப்பது போல் பார்த்து விட்டு மீண்டும் நடந்தான்.

மீனா அவன் முன்னால் ஓடி வந்து

"மொட்டையும்  மொட்டையுஞ் சேந்துச்சாம்
முருங்க மர்த்துல ஏறுச்சாம்
கட்டெறும்பு கடுச்சுதாம்
காலுகாலுனு கத்துச்சாம்"

என்று பாடிவிட்டு ஒழுங்கு காண்பித்தாள்.


இரு உங்க அம்மாட்ட நீ எலந்த பழம் பந்தயம் வச்சு அஞ்சாங்கல் ஆடுனத சொல்றேன்.

சொல்லிக்கோ சொல்லிக்கோ
சொம்பெடுத்து மாட்டிக்கோ
ஜெயிலுக்குள்ள பூந்துக்கோ

என்று பாடிவிட்டு பரிகாசமாக சிரித்தாள். 

மீனாவின் வீடு வந்தது. திண்ணையில் மீனாவின் தோழிகள் இருவரும் பக்கத்து வீட்டு பையனும் அமர்ந்து அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

மாரி கதவின் அருகில் நின்று மீனாவைப் பற்றி சொல்லப் போவது போல் உள்ளே பார்த்துவிட்டு மீனாவைப் பார்த்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மாரியைப் பயத்துடன் பார்த்துக் கொண்டு திண்ணையின் அருகிலே நின்றாள். மாரி உள்ளே சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீனாவைப் பார்த்து சிரித்தவாறு வந்தான். அவன் சொல்ல மாட்டான் என்று தெரிந்து தான் பரிகாசமெல்லாம் செய்தாள். அங்கிருந்தவர்களை விட மாரி நன்றாக ஆடுவான். இதனால் பல முறை பொட்டப் பிள்ளைங்கள விட நல்லா ஆடுறியே என்று அத்தையின் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறான். வரும் வெள்ளிக்கிழமை திருவிழா வர இருப்பதால் மீனாவின் அப்பாவும் மாரியின் அப்பாவும் வெளியில் சென்றிருந்தனர். திருவிழா பற்றிய ஆரவாரமும் பேச்சும் ஊர் முழுவதும் நிறைந்திருந்தது. விளையாடி முடித்து மற்றவர்கள் சென்றதும் மாரியை கூட்டிக்கொண்டு போய் திருவிழா அன்று தான் அணியவிருக்கும் மஞ்சள் நிற பட்டுப் பாவாடையைக் காட்டினாள். கைகளின் ஓரத்திலும் பாவாடையின் அடியிலும் சிகப்பு நிற கரை வைக்கப்பட்டிருந்தது. இது உனக்கு நல்லா இருக்கும் என்றான். அவள் புன்னகைத்துக் கொண்டே அதை மடித்து வைத்தாள். சட்டென திரும்பி உனக்கு அன்னைக்கு லீவு உடுவாங்களா என்று கேட்டுவிட்டு அவனது பதிலுக்காக அவன் முகத்தை பார்த்தபடி நின்றாள். அவன் சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு லீவு இல்ல என்றான். அவள் முகம் வாடியது. ஆனா எங்கப்பா லீவு போட சொல்லிட்டாங்களே என்று தலையை ஆட்டிக் கொண்டே சொன்னான். அவள் வருத்தம் நீங்கி பொய் கோபத்தோடு போடா மாட்டுசாணி மாரிமுத்து என்று அடித்துவிட்டு ஓடினாள். மாரி சிரித்தவாறே துரத்தினான். மீனா அவள் அம்மாவின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு அடிக்க வரான் என்றாள். வழக்கம் போல அவளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை அவன். 

இத்தசோடு ஆயிட்ட இன்னும் அவஇவனு கூப்டுட்டு இருக்க மாமானு கூப்டனும்னு சொல்லிருக்கேன்ல என்று மாரியின் அத்தை அவளைக் கண்டித்தார். அவன மட்டும் எதும் சொல்லாதிங்க ஹிம்ம் என்று மாரியைப் பார்த்து உதட்டை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக ஆட்டிவிட்டுச் சென்றாள்.

அடுத்தநாள் பள்ளிக்குச் சென்று பீட்டரிடம் திருவிழாவுக்கு வருவியா என்று கேட்டான்.  நைட்டு கச்சேரிக்கு வருவேன் என்று கூறினான்.

திருவிழா அன்று அதிகாலையில் மாரியின் அம்மாவும் மீனாவின் அம்மாவும் பொங்கல் வைக்க கிளம்பினர். பின்னர் குண்டம் இறங்குதல். அப்பா பக்கத்தில் நின்று  வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாரியின் பின்னால் வந்து  அவன் முடியைப் பிடித்து இழுத்தாள் மீனா. பள்ளி செல்லும் போது வழக்கமாக பின்னிக் கொள்ளும் இரட்டை ஜடை போடாமல் தலைக்கு குளித்து முடியைப் பின்னாமல் ஒரு கிளிப் குத்தி வந்திருந்தாள். அவன் திரும்பி பார்த்த போது நீ முன்னாடி நின்னா எனக்கு எப்புடி தெரியும் எனக் கேட்டாள். பதிலுக்கு அவள் முடியை  இழுக்க முயன்ற போது  முழுமையாக காயமல் ஈரத்துடன் அவளது கூந்தல் இருந்தது. இரண்டு புருவங்களுக்கு இடையில் சிவப்பும் அதற்கு மேல் திருநீரும் இட்டிருந்தாள். அவன் சொன்னது போலவே அவளுக்கு அந்த பட்டுப்பாவாடை நன்றாகத்தான் இருந்தது. முன்னாடி வந்து நில்லு குள்ளகத்திரிக்கா என்று வழிவிட்டான். எலியும் பூனையுமாவே இன்னமும் பண்ணிக்கிட்டு இருக்கிங்களே என்று மீனாவைத்தூக்கி மாரியின் அப்பா தோள் மீது உட்கார வைத்தார். இரவில் சாமி ஊர்வலம் வந்தது. அது முடிந்ததும் கச்சேரி. ஊர் சுற்றி சாமி கோவிலுக்கு வருவதற்கு முன் பீட்டர் அவன் குடும்பத்துடன் வந்து விட்டிருந்தான். மாரியும் ராமும் மேடை அருகில் வந்த போது ஏற்கனவே சிலர் வந்து இடம்பிடித்து உட்கார்ந்திருந்தனர். மேடையில் வெறுமனே ஒலி பெருக்கியில் சாமி பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. 


இவர்களைப் பார்த்த பீட்டர் மாரியைக் கூப்பிட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான். மாரியும் ராமும் அன்று காலையிலிருந்து நடந்தவற்றை பீட்டருக்கு விவரித்துவிட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தனர். பீட்டர் திங்களன்று ரேங்க் கார்டு தராங்க வந்திடுங்க என்றான்.  ஒலிபெருக்கியில் பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பாசத்திலே தெரியுதடி கோடி விளக்கு என்ற பாடலின் சத்தம் காதைப் பிளந்தது. எனவே கடைகள் போட்டிருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.  ஒரு பாட்டு பாடிக் காட்டுறேன் என்று பீட்டர் ஆரம்பித்தான்.

பாளையத்தம்மா நீ பல்லவிலக்கு உன்
பல்லுல தெரியுதடி கோடி அழுக்கு

என்று பாடிவிட்டு சிரித்தான்.

என்னடா சாமிய பழிக்குற என்றான் ராம்

மாரியும் அப்புடிலாம் பழிக்கக் கூடாதுடா என்றான்.

இதுல என்னடா இருக்கு. இன்னைக்கு சாயந்திரங்கூட சர்ச்சுகிட்ட விளையாடிட்டு இருக்கும் போது இந்த பாட்டு பாடுனேன் பாதர் பாத்துட்டு ஒன்னுமே சொல்லலியே என்றான்.

பொய் சொல்லாத பாதருக்கு கேட்டுருக்காது கேட்டுருந்தா கண்டிப்பா எதாச்சு சொல்லிருப்பாரு-மாரி

நா சத்தமா தான் பாடுனேன். பாதர் அத கேட்டுட்டு சிரிச்ச மாதிரி இருந்துச்சு.

பாதர் அத கேட்டுட்டு சிரிச்சாரா பொய் சொல்லாத

நிஜமா தாண்டா

நிஜமாவே ஒன்னும் சொல்லலியா

ஆமாடா

மௌனமாக மூவரும் நடந்தனர்.

மாரி சிறிது நேரம் கழித்து பாதர் ஒரு வார்த்த கூட சொல்லலியா என்றான்.

எதுவுமே சொல்லல.

மாரியால் கச்சேரியை கேட்கவே முடியவில்லை. என்னவோ போல் இருந்தது. கச்சேரி முடிந்ததும்  பீட்டர் அவன் அப்பா அம்மாவை நோக்கி நடந்தான் அவர்களிடம் பேசி விட்டு வரலாம் என்று மாரியும் அவனுடன் சென்றான். 

பீட்டர் சறிது தூரம் சென்றதும் பாதருக்கு வயசாயிடுச்சில்ல காது கேட்ருக்காதுடா என்றான்.

அவரு நீ பாடுனதும் உன்ன திரும்பி பாத்தாரா.

இல்ல.

 

Comments

Popular posts from this blog

மறைவின் வருகை

ஹெமிங்வே கவிதைகள்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து