மறைவின் வருகை

பாட்டா ஒருநாளும் என்னைத் தேடி வந்ததில்லை. ஆனால் எனக்கு பார்க்க வேண்டுமென்று தோன்றும்போது நிச்சயம் என் கண்ணில் தென்பட்டுவிடுவார். அப்படித்தான் அன்றொரு நாள் புரவிபாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து சேரும் சாலையின் ஓரமாக நின்றிருந்த பாட்டாவைப் பார்த்தேன். மேலாடையின்றி தலையில் உருமாலையும் இடுப்பில் வேட்டியும் அணிந்து, நரைத்திருந்த புருவத்தின் மீது வலது கையை வைத்து அண்ணாந்து கண்களை இடுக்கி வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாக நானும் பாட்டா பார்த்த திசையில் மேலே நோக்கினேன். நடுவானில் இருந்த சூரியனின் ஒளி, கண்களை கூசச்செய்து கண்ணீரைத் துளிர்க்கச்செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. சூரியனைச் சுற்றி ஒரு ஒளியாலான வட்டம் இருப்பது போலப்பட்டது. நான் பாட்டாவை நெருங்கினேன். ஆள் வரும் சத்தம் கேட்டு பாட்டா கைகளால் கண்களை கசக்கியபடி பார்த்தார். வருவது நானென அறிந்ததும் புன்னகையுடன் ‘இன்னைக்கு வட்டம் போட்டிருக்கு மழை வரும்’ என்றார். மீண்டும் மேலே வெளிச்ச வட்டத்தைப் பார்த்தேன். வெயில் பொழிந்துகொண்டிருந்தது.


மழை வர்றது உறுதி என்றார்.


வட்டம் இருந்தா மழை வராதுன்னு தான அன்னைக்கு சொன்னீங்க...?


அது கோட்டை கட்டுறது. வெளிச்ச வட்டத்துக்கும் சூரியனுக்கும் நடுவில் இடைவெளி இருக்கும். இது வட்டம் போடுறது. நடுவில் இடைவெளி இருக்காது.


நான் மையமாக தலையசைத்தேன். எப்படி என்று கேட்கவில்லை. பாட்டாவிற்கு அவருக்கே உண்டான காரணங்கள் உண்டு. என்னைப்போல சிறுவர்களன்றி மற்றவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது.


‘இப்ப சாயங்காலம் சூரியன் சாயுறப்போ கிழக்கால அடிவானத்துல நீலக்கோடு இருந்துச்சுன்னா, அதப்பார்க்கும் போது ஒடம்பு என்னாவோ குளுந்த மாதிரி இருக்கும். அதுவரைக்கும் அங்க ஒறஞ்சி இருந்தது நம்ம கண்ணு பட்டு எழுந்து வந்திடும். ராத்திரி வீசுற காத்துல கலந்து வந்து எல்லாத்தையும் தொட்டு தொட்டு பாக்கும். அது தொடுற எடத்துல ஊசி குத்துற மாதிரி குளிர் இருக்கும்’ என்பார். முன்னொருநாள் அவ்வாறு கண்ட அன்று என்னிடம் மொத்தமான போர்வையைப் போர்த்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். நான் அவ்வாறே செய்தும் கூட அன்று என்னால் குளிர் தாங்க முடியவில்லை. 

ஒவ்வொரு உடலிடுக்கிலும் வெயில் புகுந்து வியர்க்க வைத்துக் கொண்டிருக்க, பாட்டா மழை வருமென்று சொன்னதை என்னைத் தவிர வேறு யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. பாட்டா கணிக்கும் வானிலைகள் துல்லியமாகவே இருந்த போதிலும், மனிதர்கள் உடையணிவதை நிறுத்த வேண்டும் பறவைகள் குழம்புகின்றன என்பது போன்ற அவரின் அறிவுறுத்தல்களால் அவரின் பேச்சுகளை பொதுவாக ஊரில் எவரும் மதிப்பதில்லை. பாட்டா குத்தைக்கு விவசாயம் செய்த வயலில் அறுவடைக்கு விளைந்து நின்ற கதிர்களை பறவைகளும் ஆடுகளும் மாடுகளும் போட்டி போட்டு மேய்ந்து கொண்டிருப்பதை தூரத்திலிருந்து கண்ட அவர் மனைவி ஓட்டமாக ஓடி வந்த போது நடைபழகாத ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கதிர்களைப் பறித்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்த பாட்டாவை கண்டதும் நம்ப முடியாமல் மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அப்படியே கண்ணீருடன் திரும்பிச் சென்று காணாமலானாள். அதன்பிறகு தான் அவரின் பேச்சுக்கு சுத்தமாக மதிப்பில்லாமலானது.


பெரும்பாலும் அவர் தலையில் உருமாலையும் இடையில் ஒரு கோவணமும் மட்டுமே இருக்கும். இன்று அவர் வேட்டி அணிந்திருப்பதைக் கண்ட போது உறவினர் எவர் வீட்டுக்கோ போய்விட்டு வந்திருப்பாரென்று தோன்றியது. விசாரித்த போது புன்னகையுடன் புரவிபாளையத்தில் கட்டிக்கொடுத்த தன் தங்கையின் மகன் வழி பேரனுக்கு பாடம் போட்டுவிட்டு வருவதாக கூறினார். அப்போது வேகமாக வரும் பைக் ஒன்றின் சத்தம் கேட்டதும் மனம் எச்சரிக்கையடைந்து என் முகம் மாறியது. நான் பாட்டாவுடன் பேசிக்கொண்டிருப்பதை சித்தப்பா பைக்கில் வேகமாக போனபடியே பார்த்தார். அவ்வளவு வேகத்திலும் பாட்டா மீதிருந்த அருவருப்பும் அதன் விளைவாக என் மீதான துவேஷமும் அவர் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. அவர் எங்களைத் தாண்டிச் சென்றதும் மீண்டும் பாட்டாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் அந்த புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது. தங்கையின் பேரனிடம் தன் அன்னையின் சாயலிருப்பதை சொல்லி மேலும் புன்னகைத்தார்.


நான் வீட்டருகே சென்ற போது என் சித்தப்பா என் வீட்டிலிருந்து வெளியே வந்தார். நான் பயந்து கொண்டே அவரை ஏறிட்டுப் பார்த்தேன். என்னை முறைத்தபடி ‘அந்த பைத்தியக்காரன் கூட உனக்கு என்ன பேச்சு’ என ஆவேசமாகக் கேட்டார். நான் பதில் பேசாமல் முகத்தை பாவமாக வைத்தபடி நின்றேன். ‘புத்தி ஸ்வாதீனமுள்ளவனா இருந்தாலும் அவங்கூடலாம் பேசக்கூடாதுன்னு தெரியாதா?’ நான் தலையைத் தொங்கபோட்டுக்கொண்டு நின்றேன். ‘சாதி கெட்ட நாயி’ என தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தார். நான் உள்ளே நுழைந்ததும் சேலையில் புட்டா வெட்டிக்கொண்டிருந்த அம்மா கத்தரிக்கோலை கீழே போட்டுவிட்டு பாய்ந்து வந்து பளாரென கன்னத்திலும் முதுகிலும் அறைந்தாள். பின்னர் மீண்டும் முதுகில் ஓங்கி ஒரு குத்து. அழுகையில் மூச்சு ஒரு கணம் நின்று வரவே அப்பா வந்து அப்போதும் என் காது மடலில் பிடித்து இழுத்துக்கொண்டிருந்த அம்மாவின் கையைத் தட்டிவிட்டு ‘இதுக்கு எதுக்கு இப்புடி அடிச்சிட்டு இருக்க’ என என் முதுகைத் தடவி விட்டபடி கோவத்துடன் கேட்டார். ‘உங்கள பாத்து கிடுநடுங்கி போயி இவன் நின்னுருந்தா நான் ஏன் அடிக்க போறேன்’ என தரையைப் பார்த்துக்கொண்டே ஆனால் தீர்க்கமாக அம்மா கேட்டாள்.


அப்பா என்னை உள்ளே கூட்டிச்சென்றார். பாட்டாவின் சாதிப்பேரைச் சொல்லி கடுமையான வசவொன்றை அம்மா சத்தத்துடன் உதிர்த்தாள். திரும்பிய நோக்கிய போது என்னை கடுமையாக முறைத்துக்கொண்டிருந்தாள். என்னிடம் பெரும்பாலும் அம்மா கெட்ட வார்த்தை பேசுவதில்லை. அதுவும் இது போன்ற யாரிடமாவது அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய வசவுகளை முற்றிலும் சொல்வதில்லை. நான் இருக்கும்போது அதை சொன்னதற்காக அம்மாவை நோக்கி அப்பா ஆத்திரத்துடன் இரண்டடி வைத்துவிட்டு பின்பு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவருடைய அறைக்கு அதே ஆத்திரத்துடன் திரும்பினார். என் உடலும் மனதும் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்படியே அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தேன்.


எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. சூரியன் சாயத்தொடங்கிய போது எங்கள் வீட்டு ஓட்டுக்கூரையின் துளை வழியாக வரும் வெயிலொளி என் கண்கள் மீது விழுந்து உறக்கம் கலைத்தது. எழுந்த போது உடலில் மென்மையானதொரு வலி இருந்தது. சோம்பல் முறித்த போது அந்த வலி உடல் முழுதும் பரவியது சுகமாக இருந்தது. சேலைக்கு போடும் கஞ்சி வாசனையும் வியர்வை நெடியும் கலந்து வீசும் அப்பாவின் மனம் வந்தது. அவர் வீட்டின் வெளியே நின்று தன் சட்டையை கழற்றி அப்பியிருந்த நூல் கெண்டைகளை உதறிவிட்டு உள்ளே வந்தார். வந்து சட்டையை ஆணியில் மாட்டிவிட்டு முகம் கழுவச்சென்றார். நானும் எழுந்து புழக்கடை பக்கமாக சென்றேன்.


மூஞ்சி கழுவிட்டு வா புது வீட்டுல முட்டடிச்சுருக்காங்க தண்ணி விட்டுட்டு வருவோம்..


அவ்ளோதாப்பா கழுவிட்டேன்..


என்னத்த கழுவுன கண்ணுப்பூழை கூட போகாம.. என்று அப்பா அவரது கைகளால் தோண்டியிலிருந்து தண்ணீர் அள்ளி என் கண்களை அழுந்தத் துடைத்தார். அந்த கைகளின் கதகதப்பு அன்று நீண்ட நேரம் என் கண்களில் இருந்தது.


அப்பா இன்னைக்கு தண்ணிவிட வேண்டாம், மழை வரும்.


ஆமா கனவுல அங்காளம்மன் வந்து சொல்லுச்சாக்கும்!


இல்ல.. காலைல பாட்டா சொன்னாரு..


இதை சொன்னதும் தூங்குவதற்கு முந்தைய சம்பவங்கள் நினைவில் எழுந்து என்னை பதற வைத்தன. ஆனால் அப்பா நிதானமாக, ‘அவன் ஆயிரத்தெட்டு சொல்லுவான் அதெல்லாம் கேட்டுட்டு இருப்பியா நீயி? இப்ப மழை வர்லன்னா நமக்கு தான நட்டம்’ என்றார்.


பாட்டா சொன்னதை அப்பா நம்பவில்லையென்றாலும் அவரைப் பற்றி குறிப்பிட்டதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாதது எனக்கு ஆசுவாசமாக இருந்தது. அரைமைல் தொலைவிலிருந்த நாங்கள் கட்டும் புதிய வீட்டிற்கு செல்வதற்குள் வானில் ஒளி மங்கி கருமை திரண்டு இருட்டானது. அன்று பெய்த மழை நாங்கள் தற்போது இருக்கும் வீட்டுக்கு திரும்புவதற்கு சிரமமேற்படுத்தினாலும் பாட்டா சொன்னபடியே மழை வந்தது எனக்கு பெருமிதமாகவே இருந்தது. அப்பா அன்று வந்த மழை பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.


அன்றிலிருந்து நான்கு மாத காலத்தில் வீட்டின் புதுமணை புகுவிழா குறிக்கப்பட்டது. ஒருசில சில்லறை வேலைகளைத் தவிர அனைத்தும் முடிவடைந்திருந்தன. விடுமுறை நாட்களில் பத்திரிக்கை வைக்க நானும் அப்பாவுடன் சென்றேன். உறவினர்கள் போக, அப்பாவுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைத்துக்கொண்டிருந்தோம். பாட்டாவுக்கும் பத்திரிக்கை வைக்க வேண்டுமென நான் தான் அப்பாவிடம் கேட்டேன். பாட்டாவுக்கு பத்திரிக்கை வைக்க கூடாது என்பதற்காக முதலில் சில சாக்குப்போக்குகளை சொன்னார். பின்பு என்னை அதட்டும் தொனியில் வேண்டாமென்றார். பின்னர் அது அப்பாவின் கோவமாக மாறி என் கன்னத்தில் ஒரு அறையாகி என் கண்ணீராகி கடைசியில் பாட்டாவின் அழைப்பிதலானது. அப்பா என்னை அடிக்காமலிருந்திருந்தால் நிச்சயம் கடைசி வரை பத்திரிக்கை வைக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். பாட்டாவின் தெருவிற்கு சென்று அங்கிருந்த ஒரு டீக்கடையில் பாட்டாவின் வீட்டை விசாரித்தார். எனக்கு பாட்டாவின் வீடு தெரியுமென்றாலும் நான் அமைதியாகவே இருந்தேன். அப்பாவுக்கும் கூட தெரிந்திருக்கலாம், பாட்டா தனக்கு ஒரு பொருட்டேயல்ல என எனக்கு காட்டுவதற்காக கூட விசாரித்திருக்கலாம். அப்பா விசாரித்த போது பாட்டாவின் வயதுடைய ஒருவர் கையில் டீ கிளாசுடன் பவ்வியமாக எழுந்து வழி சொன்னார். அவர் அருகில் இருந்த சில இளைஞர்களும் போலியான பவ்வியத்துடன் எழுந்து நின்றிருந்தனர். அங்கு வந்ததிலிருந்து ஒருவித விறைப்புத்தன்மை அப்பாவிடம் குடியேறியிருந்தது. ஒருவேளை அந்த பவ்வியம் தரும் போலியான அதிகாரம் அப்பாவிற்கு தேவைப்பட்டிருக்கலாம்.


களிமண்ணை குழைத்து கருங்கல்லால் கட்டப்பட்ட உயரம் குறைவான பனையோலை கூரையைக் கொண்ட வீடு பாட்டாவினுடையது. வீட்டின் வெளியில் தென்னையோலைப் படலைக் கதவாக கொண்ட மேற்கூரையற்ற குளியலறை. அதனருகே உடல்முழுதும் சேறுடன் படுத்திருந்த செம்மட்டையன் என்னைப் பார்த்ததும் மகிழ்வுடன் எழுந்து என்னருகே வரும்போதே அப்பா அதை அருவருப்புடன் அடித்து விரட்டினார். பின்னர் கதவருகே நின்று பாட்டாவை அழைத்தார். பாட்டா வாசலில் வந்து நின்றதும் அழைப்பிதழ்களைக் கொண்ட மஞ்சள் பையினுள் கையை விட்டு பத்திரிக்கையை எடுக்க முற்பட்டார். அதை பொருட்படுத்தாது எங்களை உள்ளே அழைத்துவிட்டு பாட்டா வீட்டினுள் சென்றார். அப்பா தயங்கியபடி அங்கேயே நிற்க நான் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல பாட்டாவின் பின்னால் சென்றேன். கூடமும் அதில் சுவர் வைத்து தடுக்கப்பட்ட கதவற்ற ஒரு அறையும் தான் பாட்டாவின் வீடு. கூடத்தின் ஒரு மூலையில் மண்ணலால் செய்யப்பட்ட விறகடுப்பு. சாணி மெழுகப்பட்ட தரையில் போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் நான் சென்று அமர்ந்தேன். அதில் ஏற்கனவே ஒரு பூனை படுத்திருந்தது. அப்பா மஞ்சப்பையை என்னிடம் தந்துவிட்டு பத்திரிக்கை வைக்கும் தாம்பூலத்தில் இரண்டு ஜோடி வெற்றிலைப்பாக்குடன் வைக்கப்பட்ட அழைப்பிதழை பாட்டாவிடம் நீட்டினார். பாட்டா அழைப்பிதழையும் ஒரு ஜோடி வெற்றிலைப்பாக்கையும் எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார். கிளம்பும் போது ‘ஜூன் ஆறாந்தேதி வைகாசி இருபத்தொன்பது கண்டிப்பா வந்துடு’ என்று சொன்னேன். விடைபெறும் நோக்கில் தலையாட்டிவிட்டு வெளியே வந்ததும் அப்பா என்னை முறைத்தார். ‘அவருக்கு படிக்கத்தெரியாதுப்பா அதான்..’ என்று அப்பாவிடம் கிசுகிசுத்தேன்.


அதிகாலையில் தொடங்கிய வேள்விகள் முடிந்து, பால் காய்ச்சப்பட்டு, பசுவும் அதன் கன்றும் டைல்ஸ் தரையில் வழுக்கிய குளம்புகளுடன் கஷ்டப்பட்டு வீட்டினுள் நுழைய வைக்கப்பட்ட பின்னர் காலை உணவு. தரைத்தளத்தில் போர்டிகோவும் அதன்மேல் முதல் தளத்தில் பால்கனியும் கொண்ட வீட்டின் மாடியில் தென்னை ஓலை பந்தலுக்கு கீழே உணவு பரிமாறப்பட்டது. பாட்டாவிற்கு கொடுப்பதற்கென்றே சில குளோப்ஜாமூன்களை பதுக்கி வைத்திருந்தேன். கடைசி வரை பாட்டா வரவில்லை. காலை உணவு முடிந்து அனைவரும் கிளம்பிவிட நெருங்கிய சொந்தங்கள் மட்டும் ஒரு பதினைந்து பேர் இருந்தனர். அப்போது வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்து உருமாலையாக கட்டும் துண்டை கழுத்தைச்சுற்றி போட்டுக்கொண்டு வழுக்கை தலையில் படிய வைத்த முடியுடன் தூரத்தில் பாட்டா வந்துகொண்டிருந்தார். சட்டையணிந்திருந்ததால் வருவது பாட்டா என்று உணர எனக்கு சில நொடிகளானது. சொந்தங்களின் மத்தியில் சிறு சலசலப்பு கேட்டது. அம்மாவின் கண்களில் திகைப்பு. பாட்டாவின் வருகையை அப்பாவும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஆத்திரப்பட்ட சித்தப்பாவை எவரோ சமாதானம் செய்துகொண்டிருந்தனர். கேட்டைத் தாண்டி போர்டிகோவின் முன் பாட்டா வந்து நின்றபோது எவரும் வரவேற்கவில்லை. அப்பா என்ன செய்வது என்று குழம்பி பதற்றத்துடன் நின்றிருந்தார். அங்கிருந்த ஒவ்வொரு முகமும் ஏதோவொரு வகையில் பாட்டாவை வெறுப்பது தெரிந்தது. பாட்டா வழக்கம் போல எந்த சலனமுமில்லாமல் புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்.


அம்மா தன்னுணர்வு பெற்று என்னிடம் போர்டிகோவைக் காட்டி, ‘டேய் மேல இருந்து எலையயும் சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்து இங்க போடு, மொதல்ல அவரு சாப்பிட்டுட்டும்’ என்று சொன்னாள். அதன் முழு பொருளையும் உணராத நான் மேலே இருந்து இலையை எடுத்துவர எத்தனிக்கவே பாட்டா என்னைப் பார்த்து,


‘எல்லா சாமானையும் எடுத்துட்டு வந்து கீழ வச்சுடு இன்னும் கொஞ்ச நேரத்துல காத்தெடுத்துக்கும்.. அப்புறம் எல்லாம் புழுதியாயிடும்’ என்றார்.


அப்பாவைப் பார்த்து ‘மேல கையை காட்டி ‘கருக்கல் போட்டுருச்சு’ என்று புன்னகையுடன் சொன்னார். அப்பா கஷ்டப்பட்டு பதில் புன்னகைத்தார். பாட்டா அப்படியே நின்றிருக்க சில கணம் நிசப்தம். பின்னர் எவரிடமென்றில்லாது ‘அப்பம் பாப்பம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். நான் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒவ்வொருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். அனைவரிடமுமிருந்த அசௌகரியம் மெல்ல நீங்க தொடங்கியது. அவரை அழைத்து சாப்பிட வைக்க நினைத்த போதிலும் என்னிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. என் கால்கள் அவரை நோக்கி நகரவுமில்லை. புது வீட்டில் என் கால்கள் புதையுண்டிருந்தது போல உணர்ந்தேன்.


அவர் நகர ஆரம்பித்ததும் தரையிலிருந்த மண்ணை எங்கள் மீது வாரி தூற்றியபடி காற்றடித்தது. பந்தலிலிருந்து தென்னங்கீற்று பறந்து வந்து கீழே விழுந்தது. எங்கள் வளாகத்தில் இருக்கும் வேப்ப மரம் பிடுங்கிக்கொண்டு பறந்து செல்ல முயல்வது போல் ஆடியது. மாடியில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எல்லோரும் கலைந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து வைக்க ஓடினர். ‘இதுக்குள்ள யாரு குளோப் ஜாமுன போட்டு வச்சுருக்குறது.. எல்லாம் ஒரே மண்ணு’ என்று யாரோ சத்தமிடுவது கேட்டது. நான் அங்கேயே நின்று பாட்டாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது வழுக்கை தலையிலிருந்த முடி கலைந்து விந்தையானதோர் நடனமிட்டது. வேப்பமரத்தின் அடியில் சென்றதும் கைகளை விரித்து, வீசும் காற்றில் திளைத்தபடி பாட்டா நின்றார். அவரது விரித்த கைகளில் கனிந்த வேப்பம்பழங்கள் விழுந்தது. அதிலொன்றை எடுத்து தோலைப்பிதுக்கி சதைப்பற்றுடன் கூடிய கொட்டையை வாயிலிட்டு புன்னகையுடன் சுவைத்துவிட்டு நடக்கத்தொடங்கினார். பின்னர் காற்றின் வேகம் கூடி மேலும் மேலும் புழுதி எழுந்து அனைத்தையும் மறைத்தது. என் பார்வையிலிருந்து என்றென்றைக்குமாக பாட்டா மறைந்தார்.

Comments

Popular posts from this blog

ஹெமிங்வே கவிதைகள்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து