அவள் கொற்றவை
நான்கு மூங்கில்களுடன் நீல நிற தார்பாய் கட்டப்பட்டிருந்தது. கடல் காற்றினால் அது எழுப்பும் ஓசையை கேட்கும் போது கொற்றவைக்கு பதின் பருவத்தில் பேய் காற்றில் சுழன்றடிக்கும் மழையில் அவளது வீட்டில் பயந்து கொண்டு படுத்திருந்தது நியாபகம் வந்தது.
இப்போது மச்சு வீட்டில் அவளும் அம்மாவும். அக்காவிற்கு திருமணமாகிவிட்டது.
மெரினா கடற்கரை மணற்பரப்பு முடிந்து சாலை வரும் இடத்தில் இருந்த கடையின் வாடிக்கையாளர்களுக்காக வெயிலின் தாக்கத்தை அந்த நீல நிற தார்பாய் தான் வாங்கிக் கொண்டிருந்தது. கடற்காற்றில் அது எழுப்பிய ஒலியில் அதன் அடியில் அமர்ந்திருந்த அனைவரும் சற்றைக்கொருதரம் நிமிர்ந்து மேலே பார்த்த வண்ணம் இருந்தனர். கொற்றவை மட்டும் அந்த இடத்திற்கு பழக்கப்பட்டவள் போல இருந்தாள். அந்த மூங்கிலிலிருந்து பிய்த்துக் கொண்டு பறந்துவிட அந்த தார்பாய் நினைப்பதாக அவளுக்குப் பட்டது. மற்றவர்கள் தன் நிழலில் குளுமையாக இருக்க மரம் வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம் தனக்கு என்ன வந்தது என்று அது அவளைப் பார்த்துக் கேட்டது. ஒரு வேளை மரத்தின் வேர்களை என்றென்றைக்கும் நகர முடியாதபடி பூமாதேவி பிடித்திருக்காவிட்டால் அந்த இதமான கடற்கரை காற்றில் மரமும் பறக்க ஆசைப் பட்டிருக்குமா?
செடியாய் இருக்கும் போதே பறக்க ஆசைப்பட்டு பூமாதேவியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள தன்னை இழுத்து இழுத்து கொற்றவையின் முடியில் சுற்றப் பட்டிருந்த இரப்பர்பேண்டைப் போல எலாஸ்டிக் தன்மை நீங்கி நீளமாகி இன்று மரமாகி விட்டதா?
அவள் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கடையில் வேலை செய்யும் சிறுவன் இறாலை அவள் முன் வைத்துவிட்டுச் சென்றிருந்தான்.
அவள் அக்காள் பிறப்பதற்கு முன்பே அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். அப்பா வந்த சிறிது மாதங்களில் அவர் செய்து கொண்டிருந்த கொத்தனார் தொழிலில் பேமஸாகி விட்டார்.
அவளது சொந்தங்களிலே அவள் அளவிற்கு நன்றாக படிப்பவர் யாருமில்லை என்று அவளது மாமா பார்க்க வரும் போதெல்லாம் சொல்வார்.
"நம்ம ஆளுகல்ல யாருக்காச்சு இவ்வளவு புத்திய ஆண்டவன் குடுத்திருப்பானாடே"
என்று அவர் கூறும் போது அவர் முகத்தில் தெரியும் பெருமை அவளை வெட்கமுறச் செய்யும்.
அவள் நன்றாக படிப்பதை ஊரில் சொல்லிக் கொள்வதில் அவருக்கு அளவு கடந்த பெருமை. காசுக்கு கஷ்டமாயிருந்தாலும் அவளை சமூகத்தில் உயர் வர்க்கத்தினராக சொல்லிக் கொள்ளப்படுபவர்கள் அதிகளவில் படிக்கும் பள்ளியில் தான் சேர்த்தார்கள். அவளது அக்காவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அக்காவுக்கு அவள் அளவுக்கு படிப்பு வரவில்லை என்றெல்லாம் கவலை இல்லை. அவளை யாரும் உயர்வாய் பேசுவதில்லை. கொற்றவைக்கு சிறு வயதில் இருந்தே நண்பர்கள் குறைவு தான். பள்ளியில் அவளுடன் அதிகம் யாரும் பேசுவதில்லை என்றாலும் அவளிடம் யாரும் வம்புகள் செய்வதில்லை ஆசிரியர்களுக்கும் அவளை ஏனோ பிடிப்பதில்லை. எட்டாம் வகுப்பில் ஒருமுறை அவள் பள்ளியில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் கவனிக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்ததை தமிழாசிரியர் பார்த்துவிட்டார்.
"கொற்றவை தலையில் கொட்டு வை" என்று பக்கத்தில் இருந்த பங்கஜத்திடம் சொன்னதும் வகுப்பில் சிரிப்பலை. பங்கஜமும் சிரித்துக் கொண்டே கொட்டியதில் அவ்வளவாக வலிக்கவில்லை. ஆனால் அழுதாள். அதற்கு பின் தான் அவளுக்கு கேலியும் கிண்டலும் நேர்ந்ததெல்லாம்.
சில வாரங்களுக்கு முன்புதான் அவள் அப்பா குடித்துவிட்டு வேலை செய்த போது கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து விழுந்து இறந்து போனார்.
அம்மாவால் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கவைக்க இயலாது. இருவரையும் படிக்க வைக்க வேண்டுமே...
அவள் மாற்றாகி போனதில் அவள் பள்ளியில பெரிதாய் யாருக்கும் வருத்தமில்லை. பங்கஜத்துக்கு தான் அவளும் மற்றவர்களும் கேலி செய்ததில் கொற்றவை பள்ளியை விட்டே சென்று விட்டாள் என்று வருத்தமும் பரிதாபமும்.
அவளது அக்காவுக்கு வேலை கிடைக்கவும் இவள் பள்ளிப் படிப்பு முடியவும் சரியாக இருந்தது. அவளது அக்காவை கல்லூரியில் படிக்க வைக்க சிரமப்பட்டது போல் கொற்றவையை படிக்க வைக்க அவள் அம்மாவுக்கு பெரிதாய் ஒன்றும் கஷ்டப்பட தேவையில்லை.
அக்காளுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களாகிறது. அக்காவிடம் பேச வேண்டுமென்றால் கடிதம் தான். இவர்கள் வீட்டில் இருந்ததைப் போல் டெலிபோன் வைத்திருக்கும் மளிகை கடை அன்னாச்சி அக்கா வீட்டருகில் இல்லை. அம்மா சேர்த்து வைத்தது போக அக்காவும் அவளும் வேலைக்குச் சென்றுதான் இப்போது இருக்கும் மச்சு வீட்டைக் கட்டினார்கள். அம்மா இறந்த பிறகு மாமாவும் மற்றும் பெயரளவில் இருந்த மற்ற சொந்தங்களின் யோசனையின் பெயரில் வீடு அவளுக்கும், அம்மாவின் நகைகள் முக்கால்வாசியும் அவள் திருமணத்திற்கென அவளே சேர்த்து வைத்ததிலிருந்து பத்தாயிரம் ரொக்கமும் அவள் அக்காவிற்கும் என ஒதுக்கியாயிற்று.
மாமாவிடம் கொற்றவை தனியாக சென்று
அக்காவுக்கு கம்மியா குடுத்த மாதிரி இருக்கே என்றாள்.
அவளுக்குதான் செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுருக்கு.
அவா புருசன் கேட்டதெல்லாம் பண்ணி போட்டுருக்கு.
நீ கவல படாத கொத்தவ,
அப்புடி எதாச்சும் கம்மியா இருந்தா அவ புருசன் இருக்கான் வாங்கியாந்து தர்ரதுக்கு.
அக்காளின் கணவருக்கு வீடு கிடைக்காமல் போனதில் மனஸ்தாபம் தான். நீ ஒழுங்காக பங்கு பிரிக்கும் இடத்தில் பேசவில்லை என்று அடிக்கடி காரியம் முடிந்து சொந்த ஊருக்குச் செல்கையில் அக்காளிடம் கூறினார்.
ஏன் நீங்க பேசலாம்ல.
நானெல்லாம் அங்க பேசக்கூடாது.
அப்ப எங்கிட்டயும் அதப் பத்தி பேசாதிங்க.
அதன் பிறகு ஓராண்டுகளில் கொற்றவைக்கென இருந்த ஒரே ஒரு அக்காளுடனும் பேச்சுவார்த்தை இல்லாமலாகியது. என்ன செய்வது அவள் அக்கா நிம்மதியாக வாழ்ந்தாக வேண்டுமே. அவளுக்கென யாரும் இல்லாததைக் காட்டி சொத்தை அபகரித்ததாக அத்தான் நினைத்தால் அவள் என்ன செய்வாள்?
வீடு-அலுவலகம்-கடற்கரை-வீடு
வேலை பார்க்கும் இடத்தில் அவளுக்கு தோழிகள் இருந்தாலும் அங்கு வேலை செய்யும் பெண்கள் அனைவரும் வேலை விஷயமாக பேசவும் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மேலாளரை வையவும் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் மட்டுமே ஒருவருக்கொருவர் தோழிகளாய் இருந்தனர்.
கடற்கரையில் மட்டும் கடல் அவளுக்கென இருந்தது.
வீட்டில்?
கேட்கவே தேவையில்லை.
வேலைக்கெல்லாம் போக வேண்டாம் தன் குடும்பத்தோடு வந்து இருந்துவிடு என்று பல முறை மாமா கூறியும் அவள் மறுத்து விட்டாள்.
அதற்கு பின் தான் கிறிஸ்டோபர் அவள் வாழ்வில் வந்தான். உடன் வேலை பார்ப்பவன் தான். பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு கிறிஸ்டோபர் அள்ள அள்ளக் குறையாத பாசத்தைக் காட்டும் அட்சய பாத்திரமானான்.
அவளே கிறிஸ்டோபரை விட்டு அகன்றால் கூட அவன் அவளைத்தான் நினைந்திருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. ஒரு நாள் வேலை முடிந்து இருவரும் வழக்கமாக சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பும் நேரமாகியும் கிளம்பாமல் மெரினாவில் பேசிக் கொண்டிருந்தனர். அதில் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என இருவரும் சூளுரைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சூளுரைகளுக்கும் இதற்கு முன்பு பலருக்கு இருந்தது போலவே கடல் மௌன சாட்சியாய் நின்றது. தன்னை நேசிக்க அம்மா கடவுளிடம் கேட்டு ஒருவனை அனுப்பி வைத்ததாகவே அவள் நினைத்தாள். அவளின் நிம்மதிப் பெருமூச்சு கடல் அலைகளின் சீற்றத்தை இன்னும் அதிகமாக்கியது. அவளின் மகிழ்ச்சியும் வெட்கமும் அவள் முகத்திலிருந்து வழிந்து முழு நிலவுக்கு ஞாயிறு கொடுத்தது போக மேலும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன. நிம்மதியுடன் வீடு திரும்பினாள். நேரமானதால் அவன்தான் வீடு வரை கொண்டு வந்து விட்டான்.
அடுத்த நாள் காலையில் அவள் எட்டு மணிக்குத்தான் எழுந்தாள். கடைசியாக நிம்மதியாய்த் தூங்கியது எப்போது? அவளுக்கு நினைவில் இல்லை. இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் காலண்டரில் தேதியை பார்த்துக் கொண்டாள்.
அன்று, தன் சிறு வயதில் இறந்து போன அப்பாவையும் காச நோயால் செத்துப் போன அம்மாவையும் "வீட்டை நீங்களே வைத்துக கொள்ளுங்கள்" என பல முறை கடிதம் எழுதியும் பதில் எழுதாத அத்தானையும் அவன் மனைவியான அக்காளையும் நினைத்து அவள் தூங்காமல் அழவில்லை.
கிறிஸ்டோபரை காதலித்து ஒரு வருடமாகிறது. சென்னையிலுள்ள அவர்கள் வேலை செய்யும் மற்றொரு கம்பெனிக்கு மாற்றாகி விட்டான். இப்பொழுதெல்லாம் கடற்கரைக்கு அவள் தனியாகத்தான் செல்கிறாள். அவனுக்கு வேலைப் பளு இருந்தால் என்ன மேனேஜருடன் அவனுக்கு மீட்டிங் முடிய லேட்டாகி மாலை அவளைச் சந்திக்க வராமலிருந்தால் என்ன அவள் கடற் கரைக்குச் சென்று கொண்டுதான் இருந்தாள். அவன் வருவதற்கு முன்பிருந்தும் அவன் உடனிருக்கும் போதும் அவன் இல்லாத போதும் கடல் அவளுக்காக இருந்தது. அவள் இல்லாத போதும் அவளுக்காக இருந்து கொண்டுதானிருக்கும்.
எப்போதாவது அவன் வரும் போது அவளுக்கென நேரம் ஒதுக்காததைப் பற்றி சண்டைகள் வரும். கோபத்தில் கத்தவும் செய்திருக்கிறாள்.
பின்பு அவன் அலுவலகத்தில் இருக்கும் சூழ்நிலைகளை எடுத்துக் கூறி அடிக்கடி வர முடியாது என்னைப் புரிந்து கொள் என்றான்.
இப்போது அவள் சண்டை போடுவதில்லை. போட்டால் தான் அவனைப் புரிந்து கொள்ளாத பெண்ணாகி விடுகிறாளே.
வேலைப் பளு இருக்கத்தான் செய்யும் அவளும் அதே வேலைக்குச் செல்பவள் தான்.
ஆனால், அவன் கூறும் அளவிற்கு இந்த உலகத்தில் எவரேனும் பிஸியாக இருப்பார்களா?
அவனுக்கு அவன் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்ற பேச்சு அவன் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது அவளைக் காதலிக்க உற்ற நண்பனாய் இருந்து உதவிய பரமுவின் மூலம் அலுவலகத்தில் உலவியது.
வேறு மதமாக இருந்தால் கூட பராவாயில்லை ஒரே சாதியாக இருந்திருந்தால் கூட அவன் வீட்டில் பேச இவளுக்கு ஏதாவது இருந்திருக்கும என அவளுக்கு தெரியாமலே பலரின் நாக்கு அவளுக்காக பரிதாபப்பட்டது.
அவள்.
அம்மாவுக்காகவும் அக்காவுக்காகவும் வாழ்ந்த அவள்.
அவர்கள் போன பிறகு அவனுக்காக வாழ்ந்தவள்.
இன்னும் அவனை நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.
அவன் வராவிட்டாலும் அவனை நினைத்துக் கொண்டிருக்கும் இந்த மனம் தான் அவனும் அப்படித்தான் இருப்பான் என்ற நம்பிக்கையை முன்னாட்களில் கொடுத்ததோ?
இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ?
இப்போது அவனைப் பார்த்து இரு மாதங்களாகிறது. ரேடியோவில் கேட்ட காதல் கீதங்கள்அவளது மனதைக் கிளறிவிட நாளை, முடிந்தால் தன்னை வந்து பார்த்துச் செல்லுமாறு சொல்லாம் என அன்னாச்சி கடைக்குச் செல்ல சில்லறைகளைத் தேடினாள். கடலில் புயல் வருவதாகவும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என ரேடியோவில் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கவும் சில்லறைகள் எடுக்கவும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் சில்லறைக் காசுகளைக் கையில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றாள். ரேடியோவைப் பார்த்துக் கொண்டே பலமாக சிரித்தாள். சிரித்துக் கொண்டே சில்லறையை விட்டெறிந்தாள். காசுகள் தரையில் பட்டு சிதறி அவள் சிரிப்பின் சத்தத்தை கூட்டிக் கொண்டிருந்தன. அவள் சிரிப்பில்அறையே அதிர்ந்தது.
கொற்றவை அல்லவா அவள்.
அவள் அம்மாவின் சாய்வு நாற்காலியில் அப்படியே படுத்து கண்களை மூடினாள். இன்னமும் உதடுகளிலிருந்து சிரிப்பு நீங்கவில்லை. எப்போது உறக்கம் வந்ததென்று தெரியவில்லை. சில மணி நேரங்களே என்றாலும் அவ்வளவு நிம்மதியாக அவள் உறங்கியதில்லை. அவள் எழும் போது பக்கத்து வீட்டு மாலாவும் இன்னும் சில மனைவிமார்களும் நான்கைந்து நாட்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவளுக்கு ரொட்டித் துண்டுகளே போதும்.
புயல் ஓய்ந்து ஊர் சகஜ நிலைக்குத் திரும்பியது. வழக்கம் போல அவள் மாலையில் கடற்கரைக்குச் சென்றாள். அவளுக்காக கடல் காத்திருந்தது. பின்பு அவள் எப்போதும் செல்லும் கடைக்குச் சென்றாள். புயல் அந்த நீல நிற தார்பாய்க்கும் விடுதலை கொடுத்திருந்தது. ஏன் சில மரங்களுக்கும் கூட.
Comments
Post a Comment