சாவடி
ஒரு வருடமாகியும் கன்னடம் ஒழுங்காக வரவில்லை. சமையலுக்கு வைத்திருந்த ஆளுக்கு புரியாத தமிழ் சொற்களாலும், முக பாவனைகளாளலும் சீக்கிரம் சமையல் ஆகட்டும் என்பதை பணித்துக் கொண்டிருந்தான்.
பெங்களூரில் தனது கம்பெனியில் வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து ஒரு பிளாட்டில் வசிக்கிறான். சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சம்பளமும் வேலை நேரமும்.
"பதினோரு மணிக்கு தானடா ரயில் அப்புறம் ஏன் குதிச்சுட்டு இருக்க சும்மாவே அவன் உப்பு,காரம் எல்லாம் ஒழுங்கா போட மாட்டான்" என்றான் முரளி .
சரவணனின் மனதிலிருந்த ஆவலே அவன் செயலில் பரபரப்பாய் வழிந்தது. மூன்று வருடங்கள் கழித்து தான் ஆறாவது வரை படித்த சொந்த ஊருக்குச் செல்ல இருக்கிறான்.
நாம் காணச் செல்லும் இடங்களையும் பயணங்களையும் விட அவற்றைப் பற்றிய கற்பனைகளே ஆர்வம் ஊட்டுவதாக உள்ளன. ஒன்பது மணிக்கெல்லாம் சமையல் முடிந்தும் சாப்பிடாமல் அதை பார்சல் செய்து கொண்டான். ஊருக்கு செல்ல வேண்டிய பைகள் நேற்று இரவில் இருந்தே தயார் நிலையில் நின்று கொண்டிருந்தன. அதில் ஒன்றை திறந்து சாப்பாட்டு பார்சலை திணித்தான். சரவணன் படுத்தும் பாட்டில், முரளி கிக்கரை ஓங்கி மிதித்ததில் பைக் சிணுங்கிக் கொண்டே ஸ்டார்ட் ஆனது. தினமும் ஆபீசுக்கு செல்லும் வழி தான் என்றாலும் இன்று தான் அதை கவனிப்பதாக தோன்றியது இதற்கு முன் அவனுக்கு காட்சி அளிக்காத எத்தனையோ கடைகள் இன்று அவனுக்கு காட்சியளித்தன. பைக், ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிக்னலில் நின்றது. அங்கு சற்று தள்ளி சில பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள் அதில் மஞ்சள் நிறப்புடவை அணிந்த பெண் தன்னை விலை பேசுபவனிடம் ஆத்திரம் கொள்ள முடியாமலும் இனிமையாக வரவேற்க முடியாமலும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். பச்சை விளக்கு எரிந்த உடன் அந்த இடத்திலிருந்து முரளியின் பைக்கும் அந்த பெண்ணும் காணமல் போயின. இரண்டு நாட்களுக்கு முன்பே அனைத்தையும் எடுத்து வைத்திருந்தாலும் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ஏதோ ஒன்றை மறந்து விட்டதாக சரவணனுக்கு தோன்றியது. முரளி தண்ணீர் பாட்டில் இருக்கா என்று கேட்டான். சரவணன் மனதில் இருந்த பாரம் நீங்கியவனாக இல்லை என்றான். ரயில் கிளம்பி சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு கண்களை மூடினான். தனது சிறுவயது நினைவுகளை நோக்கிச் சென்றவனுக்கு "தடக் தடக்" சத்தம் பின்னணி இசைத்துக் கொண்டிருந்தது.
"டேய் சரவணா"
வீட்டின் வெளித் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தவனை அவனது அம்மா அழைத்தாள்.
"தாத்தா சாவடில இருக்குறாரான்னு பாத்துட்டு இருந்தா மதியம் சாப்பிட கூட்டிட்டு வா"
என்று சொல்லி முடித்தவுடன் சரிம்மா என்று சிரித்துக்கொண்டே வாசலை நோக்கி ஓடினான் டேய் நில்லுடா. காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல் செய்து விட்டு காரின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பதுபோல் அம்மாவைப் பார்த்தான்
வரும்போது தாத்தாவ கூட்டிட்டுப் போயி ரேவதி டீச்சர் வீட்டுல இலை ஒன்னு வாங்கிட்டு வா காசு கேட்டா இந்தா 2 ரூபாய்.
போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தவனிடம் மேலும் ஒரு ரூபாய் கொடுத்து பூமர் வாங்குனா இனிமேல் காசு தரமாட்டேன் என்று எச்சரித்து அனுப்பினாள். பக்கத்து வீட்டு கமலாக்காள் சரவணன் வீட்டில் நடப்பதை அறிந்தவள் போல் வாசலில் நின்று கொண்டிருந்தாள்
"டேய் சரவணா"
மீண்டும் பிரேக் போட்டு எட்டிப் பார்த்தான் எங்க போற?
சாவடிக்கு.
சுப்பிரமணி தாத்தாவையும் வரச்சொல்லு பேங்குக்கு போகணும்.
சரவணனின் அம்மா வாசலில் நின்று இதை கவனித்துக் கொண்டிருந்தாள். சரவணன் சென்றவுடன் அவனின் அம்மாவை நோக்கி என்னக்காக இவ்வளவு சீக்கிரம் அனுப்பிட்டிங்க இன்னைக்கு என்றாள்.
அவன் பாட்டுக்கு வெளியில தனியாக விளையாடிக்கிட்டிருக்கறான். அடுப்படியில இருக்க வேலையை பார்க்கவே இன்னொரு ஆள் வேணும் போல என்று கூறிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.
சரவணனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூருக்கு அருகில் உள்ள குருவரெட்டியூர். ஊரின் மையத்தில் தான் சாவடி. சாவடியைச் சுற்றி நாற்புறமும் சாலைகள் பிரிந்து பல ஊர்களுக்கு செல்லும். சாவடியில் தங்கி செல்வோருக்கு காவலாக சிறிய கருவறையில் எந்நேரமும் கண் விழித்தபடி அம்மன் வீற்றிருக்கிறாள்.
அம்மன் சிலைக்கு நேராக வெட்டவெளியில் சிங்கம் சாவடிக்குள் பாய்வதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருந்தது அம்மனின் அறையில் விளக்குகள் ஏதுமில்லை. சரவணன் ஒவ்வொரு முறை உற்று நோக்கும் போதும் தன்னை அன்புடன் வரவேற்பது போலவும் சில முறை முறைப்பது போலவும் அம்மனின் கண்கள் அவனுக்கு தெரியும். சாவடிக்கு கதவுகள் இல்லை உள்ளே உள்ள கருவறைக்கு மட்டும் கதவுகள் அவை மூடி ஒரு நாளும் சரவணன் பார்த்ததில்லை சாவடிக்குள் இருபுறமும் பெரிதாய் போடப்பட்டிருந்த திண்ணையில் வலப்புறம் அவனது தாத்தா சுப்பிரமணி தாத்தா மற்றும் இதர சில தாத்தாக்களும் அமர்ந்து எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சரவணன் அவர்கள் அருகில் போய் அமர்ந்துகொண்டான் அவர்கள் பேசிக்கொண்டிருந்த தலைப்பு முடிவுக்கு வந்ததும் இடதுபுற திண்ணையிலிருந்து சன்னமாய் குறட்டை ஒலி கேட்டது. தாத்தா நீங்க சீல விக்க போன கதை சொல்லுங்க என்றான் சரவணன். பிறகு ஒவ்வொருவரிடமும் அவன் கேட்க விரும்பும் கதைகளைப் பற்றி கேட்டான். ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றையும், இவ்வாறு நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர்கள் நினைத்தவற்றையும் கலந்து அவனுக்கும் மற்றவர்களுக்கும் கதைகளாக கூறிக் கொண்டிருந்தனர் அதுவரையில் இடப்புறத்தில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து, அந்தியூர் எந்த வழியில் போக வேண்டும்? என்றார். லிங்கம் தாத்தா பேசிக்கொண்டே கையைக் காட்டினார். மீண்டும் அதே குரலில் சாமி பசிக்குது என்று மீண்டும் குரல் வந்தது. சரவணன் உடனே தனது தாத்தாவிடம் அம்மா உன்னை சாப்பிட கூப்பிடுச்சு என்றான். சுப்பிரமணி தாத்தாவை நோக்கி பேங்க் போகணுமாம் உன்னயும் வர சொன்னாங்க என்றான். பின் சரவணன் உண்டியலுக்கு நேராக உத்திரத்தில் இருந்த மணியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிறைப் பிடித்து ஆட்டி மணியடித்தான்.
"எல்லோரும் சாப்பிட போலாம் இன்டர்வல் விட்டாச்சு" என்று கத்தினான்.
தூங்கிக்கிட்டு இருக்காங்கல இப்படிதான் சத்தம் போடுவியா, என்று தாத்தா அதட்டினார். அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தான் பின் அனைவரும் கிளம்பினர். லிங்கம் தாத்தா சாவடிக்கு வெளியிலிருந்த குப்பாயி கடையில் பத்து ரூபாய் கொடுத்து அவனுக்கு தக்காளி சோறு குடு என்று சொல்லி விட்டுச் சென்றார்.
சரவணனுக்கு அவன் தமிழ் ஆசிரியர் கூறும் கதைகளுக்கு அடுத்து அவனது தாத்தாவும் அவரது நண்பர்களும் கூறும் கதைகள் பிடித்தமானவை. அவன் அம்மா வாசித்துக் காட்டும் குழந்தைகளுக்கான சிறுகதைகள் ஏனோ அவனுக்கு பிடிப்பதில்லை. தாத்தாவுடன் வீட்டை நோக்கி நடக்கையில் பெட்டி கடை வந்தது. தாத்தாவிடம், அம்மா கேட்டா சக்தி மிட்டாய் வாங்குனேன்னு சொல்லு என்று கூறிவிட்டு,
பூமர் ஒன்னு என ஒரு ரூபாயை மிட்டாய் டப்பா வைத்தான். பின் ரேவதி டீச்சர் வீடு வந்தது கேட்டின் அருகே சென்று,
"டீச்சர் டீச்சர்"என கத்தினான். டீச்சரின் மாமியார் எட்டிப் பார்த்தாள். அவரைப் பார்த்ததும் பாக்கெட்டில் காசு இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான் ரேவதி டீச்சர் வெளியில் வந்து என்ன என்பது போல் பார்த்தாள் இவன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் காட்டி இலை ஒன்னு அம்மா வாங்கிட்டு வர சொன்னுச்சி என்றான். அவள் நான்கு இலைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு காசு எல்லாம் வேண்டாம் என்றாள். தாத்தா வற்புறுத்திக் கொடுத்தும் டுு
கடைசி வரை வாங்கவில்லை.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவைப் பார்த்து, "அம்மா சக்தி முட்டாய் செம டெஸ்ட்" என்று இலையை கொடுத்தான். சாப்பிடும் போது அவன் தாத்தாவிடம் அம்மன் சிரிக்குதா? இல்ல முறைக்குதா? என்று கேட்டான்.
நல்லவன் சாவடிக்கு உள்ள வரும்போது சிரிச்சுக்கிட்டே வர சொல்லும் கெட்டவங்க இல்ல திருடங்க யாராச்சும் வந்தா வெளியில போகச் சொல்லி முறைக்கும் என்றார்.
அன்னைக்கு யாரும் இல்லாதப்ப பார்த்தேன் என்ன பாத்து முறைக்கிற மாதிரி இருந்துச்சு என்றான்.
அம்மா கிட்ட பொய் சொல்ற பசங்கள பார்த்தாலும் அம்மனுக்கு கோபம் வரும் என்று அவன் அம்மா சொன்னாள்.
சக்தி முட்டாய் தாம்மா வாங்கினேன் வேணா தாத்தா கிட்ட கேளு என்றான். அம்மா, இன்னும் கொஞ்சம் சாப்பாடு வச்சுக்கோங்க என்று தாத்தாவின் இலையை நோக்கிச் சென்றாள். தாத்தா போதும் என்று கூறினார்.
சாயந்திரம் ஆனதும் இவனது நண்பர்கள் விளையாட அழைத்தனர். சாவடியில் கண்ணாமூச்சி ஆடலாம் என்று சரவணன் அவர்களை அழைத்துச் சென்றான். விளையாடும் போது அங்கிருந்தவர்களைச் சுற்றி ஓடுவதும் கத்துவமதும் தாங்காமல் அங்கிருந்தவர்களில் ஒருசிலர் வசை சொற்களை உதிர்த்தனர். அந்த வசைச் சொற்களை அவர்களும் கண்டுகொள்ளவில்லை அம்மனும் கண்டுகொள்ளவில்லை.
சரவணன் சிறுவயதில் பள்ளிக்கூடத்திற்கு அடுத்தபடியாக அதிகம் இருந்தது சாவடியில் தான். அங்கு தினமும் புது புது முகங்களை கண்டாலும் அவனுக்கு அனைவரும் ஒன்றுதான் அம்மனுக்கு தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பிரிவினை இவனுக்கு இல்லை.
வேலையின் காரணமாக அவனது அப்பா ஈரோட்டுக்கு குடியேறினார் இவன் வாழ்வில் சந்தோசமாக இருந்த தருணங்களை நினைத்து பார்க்கும் பொழுது அதில் சாவடி இடம் பெறத் தவறுவதில்லை.
இப்போதெல்லாம் சொந்த ஊருக்குச் செல்ல முடிவதில்லை. சென்றவருடம் சாவடியை இடித்து புதிதாக கட்டியுள்ளோம், கும்பாபிஷேகம் வைத்துள்ளோம் என்று சித்தப்பா அழைத்தும், போக வேண்டும் என்ற என்ற ஆசை இருந்தும், புதிதாக வேலைக்கு சேர்ந்து இருப்பதால் அவன் விடுமுறை கேட்கவில்லை. இந்த வருடம் சித்தப்பா போனில் அழைத்து திருவிழா வச்சிருக்கோம் இனி எல்லா வருஷமும் திருவிழா போட போறோம் என்று கூறியதும் இவன் ஒரு வாரத்திற்கு முன்பே விடுப்பு தெரிவித்து விட்டான்.
காலை 6 மணிக்கு ரயில் ஈரோடு வந்தது அவனது அப்பா அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தார். மாலையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். ஏழு மணிக்கு சித்தப்பா வீடு வந்தது. அங்கு நிறைந்து இருந்த சொந்த பந்தங்களின் புன்னகைக்கு இவன் பதில் புன்னகை தெரிவித்துக் கொண்டான்.
சரவணன், சாவடிக்கு போய் பார்த்துட்டு வரேன் என்றான். அவனது அம்மா எல்லோரும் இருக்காங்கல்ல கொஞ்ச நேரம் பேசிட்டு போ என்றாள். தம்பி கும்பாபிஷேகத்துக்கே வரல போய் கோயில ஒரு எட்டு பார்த்துட்டு வரட்டும் என்று சித்தப்பா அம்மாவிடம் கூறினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு சாவடியை பார்க்கிறான். முன்புபோல இல்லை தற்கால கோவிலாக மாறி விட்டிருந்தது அது. கோபுரங்கள் திருவிழாவின் பொருட்டு பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன புதிய கோயில் தரையிலிருந்து 4 அடி உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டில் ஏறினான். சிங்கம் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தது வாயிலில் கதவுகள் கூட போடப்பட்டிருந்தன. உள்ளே காலை வைத்த உடனே பார்த்தான் கிரானைட் போட்டிருந்தார்கள். திண்ணைகள் எல்லாம் இருக்காது என்று நினைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தான் அதேபோல் திண்ணைகளும் இல்லை. சாமி கும்பிட்டுவிட்டு ஒரு அம்மாவும் அவரின் மகளும் மட்டும் தரையில் அமர்ந்திருந்தனர். இவன் உள்ளே வந்த சில வினாடிகளில் அவர்களும் கிளம்பினார்கள். கிளம்பும்போது அந்த அம்மா, பூசாரிய வர சொல்லட்டுமா என்றாள். பூசாரி என்ற வார்த்தையை கேட்டதுமே அவன் அவன் திடுக்கிட்டான். பின்பு சுதாரித்துக் கொண்டு இல்லை வேண்டாம் என்று கூறினான்.
அம்மனின் தலைக்கு மேல் மவண்ண விளக்குகள் ஒளிர்ந்தன. கோவிலில் இப்பொழுது அவன் மட்டும் தான் இருந்தான் அம்மனை நோக்கினான். அம்மனின் மஞ்சள் நிற புடவைக்கு மேல் இருந்த நகைகள் சிறிது நேரம் கழித்து தான் கண்களுக்கு தெரிந்தது. அம்மனை உற்றுப்பார்த்தான் புன்னகைத்து வரவேற்கவும் இல்லை முறைத்து பார்க்கவும் இல்லை. இது என் சாவடி அல்ல என்று மனதில் தோன்றியது.
மஞ்சள் புடவையையும் அம்மனின் நிலையையும் கண்டவுடன் ஒரு நிமிடம் ரயில் நிலையத்திற்கு அருகில் பாரத்த பெண் நினைவில் வந்து போனாள்.
வாசலிலிருந்து கண்ணு கொஞ்சம் திருநீர் எடுத்துக் கொடுப்பா என்று குரல் வந்தது. அவன் திரும்பாமலே வந்து எடுத்துக்கோங்க என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான். அதற்கு பதிலும் வரவில்லை உள்ளேயும் யாரும் வரவில்லை. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினான். காக்கி டவுசரும் அழுக்கு சட்டையும் அணிந்த ஒருவர் பச்சை நிறத் துண்டை கக்கத்தில் வைத்து கருவறையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தார். இவன் பார்ப்பதை பார்த்தவர் திந்நூரு என்று இறைஞ்சி கேட்பதுபோல் கேட்டார்.
மீண்டும், உள்ளே வந்து எடுத்துக்கோங்க என்றான். அவர் பதில் எதுவும் கூறாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு நடந்துவந்து அவரது கையை பிடித்து உள்ளே வாங்க என்றான். இதை சற்றும் எதிர்பாராத அவர் அவன் இழுத்ததில் இரண்டு அடிகள் உள்ளே வந்துவிட்டு பின்பு மீண்டும் வெளியில் சென்று பதற்றத்துடன் சுற்றி முற்றி பார்த்தார். மீண்டும் அவன் உள்ளே வாங்க என்று கையை பிடிக்க வரவே திந்நூரு வேண்டாம்பா என்று கூறினார். பின்பு சாமி நல்லா இருப்பா என்று கண்கள் கலங்க கூறிவிட்டு வேகவேகமாக படிக்கட்டில் இருந்து இறங்கினார். பின்பு கீழே சென்று கோவிலை பார்த்து தலை மேல் கைகளை வைத்து வணங்கிவிட்டு அதேவேகத்தில் நடந்தார் அவன் மனதில் இது நம் சாவடி அல்ல என்று இப்பொழுது பலமாய் மீண்டும் மீண்டும் தோன்றியது . அவனும் கீழே இறங்கினான். சற்று தூரம் சென்றுவிட்டு திரும்பி கோவிலைப் பார்த்தான் அவன் நினைத்தது சரிதான். அது சாவடி அல்ல.
இது "அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோவில்" என்று பெயர் பலகை அவனுக்கு காட்டியது.
Comments
Post a Comment