அகக்கண்

ஆள்கூட்டம் குறைவாக இருந்த அந்த பேருந்து நிலையத்தின் மூலையில் தனியாக எந்த சலனமும் இல்லாமல், தோள் பையை உட்கார்ந்திருந்த பெஞ்சில் தன் அருகில் வைத்துக்கொண்டு தனக்குள்ளாக ஆழ்ந்திருந்தார். அவராகத்தான் இருக்க முடியும் என்பதை தூரத்திலிருந்தே கண்டுகொண்டு ஒரு கணம் நின்று பரவசமும் பதற்றமும் மனதில் பொங்க அவரை நோக்கி காலை எடுத்து வைத்தான். 

ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். வேறொன்றும் இல்லாத கருமை நிற பின்னணியில் பொன்னிற எழுத்துக்களால் தலைப்பிடப்பட்ட முன்பக்க அட்டை. பின்பக்க அட்டையில் அவரின் கண்கள் இல்லாத கோட்டோவியம்.  நூற்றைம்பது பக்கம் தான். முதல்முறை தலைப்பை படித்ததும் ஏற்பட்ட திடுக்கிடல் இன்றும் நியாபகமிருக்கிறது. மானசீகமாக ஶ்ரீதருக்கென்றே எழுதப்பட்ட நாவல் என அவன் நினைத்ததுண்டு. புனைபெயரா நிஜபெயரா என்றறிய முடியாத, ஆசிரியர் குறிப்பில்லாத,  ஒரு நாவல். அவரின் பெயரையும் அந்த நாவலின் பெயரையும் கூகுளில் போட்டால் அந்த புத்தகம் கூட வராது. அந்த பதிப்பகம் கூட இப்போது இல்லை. அவரைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் எங்கும் இல்லை. அந்த நாவல் தான் அவர். 

ஶ்ரீதரிடமிருப்பது அவரின் கோட்டோவியமும் நாவலில் இருந்த மின்னஞ்சல் முகவரியும் தான். ஓரிருமுறை மின்னஞ்சல் செய்தான். எந்த பதிலும் வரவில்லை. அந்த நாவல் வந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தது. யாராலும் கண்டுகொள்ளப்படாத நாவல் அது. அந்த மின்னஞ்சல் உபயோகத்திலில்லாமலிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் மீண்டும் அந்த நாவலை படித்தான். ஒவ்வொரு முறை படித்து முடிக்கும் போதும் தூங்கி எழுந்ததும் அரை நினைவில் இருக்கும் கனவு போல அந்த நாவல் தோன்றும். அந்த கனவுடன் கற்பனையையும் இணைத்து பல நாவல்களை எழுதிவிட முடியும் என்று கூட அவனுக்கு தோன்றியதுண்டு. அவனும் எழுதி பார்க்க முயற்ச்சித்திருக்கிறான். எழுதியவற்றில் ஒருசிலதை யாரிடமாவது வாசிக்க கொடுக்க வேண்டும் என்ற ஆவல் எழும்போதெல்லாம் அந்த உபயோகத்தில் இல்லாத மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுவான். நாவலை படித்துவிட்டு தோன்றுவதை எழுதி அனுப்புவது என்ற நிலை மாறி தன் தனிமையை, உணர்ச்சி பெருக்குகளை, தன் கீழ்மைகளை, என எல்லாவற்றையும் அனுப்ப தொடங்கினான். ஏன் ஒருமுறை தன்னுடைய சுயவிவரங்களையும் விருப்பு வெறுப்புகளையும் கூட எழுதி அனுப்பியிருக்கிறான். நாளடைவில் அந்த மின்னஞ்சல் என்பது யாரும் எடுத்து படிக்க முடியாத பாதுகாப்பானதொரு டைரியாக மாறியது. அவ்வப்போது யாருமில்லா வேளைகளில் ரகசியமாக அவன் அனுப்பிய மின்னஞ்சல்களை எடுத்து படிக்கும் போது உண்டாகும் கிளர்ச்சியுடன் சேர்ந்த ஒரு நிறைவுக்காகவே தொடர்ந்து எழுதினான். அப்படி ஒருநாள் எழுதி கொண்டிருக்கையில் தான் முதன்முதலாக பதில் மின்னஞ்சல் வந்தது.



அன்புள்ள ஶ்ரீதருக்கு,

               வரும் ஞாயிறன்று உன் ஊருக்கு வருகிறேன். சிவரஞ்சனி ஹோட்டலில் மாலை ஆறு மணிக்கு வந்து சந்திக்கவும்.

இப்படிக்கு,
××××××××××.




ஒரு கணம் அவனால் அதை உள்வாங்க முடியவில்லை. மின்னஞ்சல் முகவரியை ஒவ்வொரு எழுத்தாக சரிபார்த்து உறுதிபடுத்திக் கொண்டான். அவரிடமிருந்து தான் வந்துள்ளது. அவன் அனுப்பிய முதல் மின்னஞ்சலிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாசித்தான். எழுதிய போது இருந்த மனவெழுச்சிகள் இல்லாமல் தற்போது பதற்றமும் சேர்ந்துகொள்ள அவையெல்லாம் எழுத்தாலான குப்பைகள் போல் தெரிந்தன. 

இதையெல்லாம் அவர் வாசித்திருப்பாரா?

முதல் சில மின்னஞ்சல்களை படித்துவிட்டு மற்ற மின்னஞ்சல்களை தவிர்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

அப்படி தவிர்த்திருந்தால் இப்போது எதற்கு வந்து சந்திக்க சொல்ல வேண்டும்?

உள்ளுக்குள் ஏதோவொன்று அதையெல்லாம் அவர் வாசித்திருக்க வேண்டும் என்று விரும்பியது.

ஒன்றுமே வாசிக்காத நான் மகத்தான நாவலை வாசிப்பனுபவம் என்கிற பெயரில் பிணக்கூறாய்வல்லவா செய்திருக்கிறேன்.?

என்னை பற்றி என்ன நினைப்பார்?

இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் பதில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்?

பெரும்பாலும் இரவு நேரத்தில் அவன் அனுப்பிய பல மின்னஞ்சல்கள் படு திராபையாக தெரிந்தன. இனிய கனவொன்று கலைந்தது போலிருந்தது.

அன்றிரவு ஶ்ரீதருக்கு தூக்கம் வரவில்லை. அரைதூக்கத்தில் கூட இதை பற்றிய சிந்தனைகளே கட்டுப்பாடில்லாமல் மனதில் பெருகி ஓடியது.

அடுத்த நாள் காலையில் அவரை சந்திக்காமல் தவிர்ப்பதே நல்லதென்று தோன்றியது. ஆனால் சந்திக்காமல் விட்டால் அவரை என்றென்றைக்குமாக இழக்க நேரிடும். 

அவனுக்கென்று இருந்த ஒரேயொரு ரகசிய மின்னஞ்சல் தோழனை இழந்தாயிற்று. எதை எழுதினாலும் எந்த எதிர்வினையும் செய்யாமல் அவனை மதிப்பிடாமல் அமைதியாக இருக்கும் மின்னஞ்சல் நண்பன் இனி இல்லை.

அவரை சந்திக்காமல் போனால் அவன் இவ்வளவு நாட்கள் அந்த நாவல் அளித்த பித்துநிலையால் செய்த செயல்களுக்கு அர்த்தமேயில்லால் போய்விடும். ஏற்கனவேஅவன் அனுப்பிய மின்னஞ்சல்கள் அனைத்தும் அர்த்தமற்றவை போல் தான் அவனுக்கு தோன்றியது. ஆனால் தன் வாழ்வில் இத்தனை நாட்கள் அர்த்தமற்று போவதை அவன் விரும்பவில்லை. என்ன ஆனாலும் சந்திப்பது என்று முடிவெடுத்தான். ஞாயிற்றுகிழமைக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரை சந்திப்பதை பற்றிய கனவுடனேயே கரைந்தது. அவரை சந்தித்ததும் என்னவெல்லாம் பேச வேண்டும் என ஒவ்வொன்றாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். 

தான் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது? ஒவ்வொரு மின்னஞ்சலாக படித்து அதற்கேற்ப ஒரு சுயவிளக்கத்தையும் தயார் செய்து கொண்டான். அந்த நாவல் கிட்டத்தட்ட மனப்பாடமாக அவனுக்கு இருந்தாலும் சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை படித்தான். ஞாயிறன்று ஐந்தரை மணிக்கு சிவரஞ்சனி இருந்த வீதிக்கு வந்தான். அது ஒரு பழைய கட்டிடம். எதிரே இருந்த கடையில் கிங்ஸ் ஒன்று வாங்கிவிட்டு ஆறு மணி ஆவதற்காக காத்துக் கொண்டிருக்கையில் தான் அதில் அத்தனை அலங்கார வேலைப்பாடுகள் இருப்பதை கவனித்தான். பாழடைந்து கொண்டிருக்கும் அழகானதொரு கட்டிடம் அவர் கண்டிப்பாக இங்கு இருக்கிறார் என்பதை கடைசியாக ஒருமுறை அவனுக்கு உறுதி செய்தது. இனிமேலும் காத்திருக்காமல் வேகமாக சாலையை கடந்து,  திறந்திருந்த இரும்பு கேட் வழியாக கீழ்தளத்தில் வாசற்படியருகே இருந்த வரவேற்பறையை அடைந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த நோக்கத்தை கூறினான். ஶ்ரீதர் வந்தால் பேருந்து நிலையத்தில் ××××க்கு செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் வந்து சந்திக்க சொன்னதாக தன்னிடம் சொல்லிவிட்டு அறையை காலி செய்துவிட்டு அவர் சென்றதை வரவேற்பிலிருந்த ஆள் சொன்னான்.

பலவாறான யோசனையுடன் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினான்.

அந்த பல யோசனைகளினூடாக இதையும் அவன் சிந்தித்தான். அவரிடம் தான் என்ன பேசவேண்டும் என்பதை மட்டுமே இதுவரை கற்பனை செய்திருந்தான்.

அவரிடமிருந்து நான் பெற்றுக்கொள்ள போவது என்ன? கீதாசாரம் போல மகத்தானதொன்றை தனக்கு கூறப் போகிறாரா?  ஞானோபதேசம் ஏதாவதா? அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள ஒன்றா? இந்த சந்திப்பின் நோக்கம் தான் என்ன?


தொலைவிலிருந்து பார்த்த அந்த கணமே அவரை கண்டு கொண்டான். பரவசமும் பதற்றமும் ஶ்ரீதர் மனதில் பொங்கி வழிந்தன. அவர் அருகில் செல்லும் வரை அவனை அவர் பார்க்கவேயில்லை. அவர் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் சென்று நின்றதும் அலட்சியத்துடன் திரும்பி பார்த்தார். 

வலிந்து உருவாக்கிக் கொண்ட புன்னகையுடன் ஶ்ரீதர் என்று தன் பெயரை அவன் சொன்னதும், தன் பக்கத்தில் இருந்த பையை எடுத்து கீழே வைத்துவிட்டு ஶ்ரீதரை தன் அருகில் அமர்ந்துகொள்ளச் செய்தார். அவன் முகம் மலர்ந்தது.








Comments

Popular posts from this blog

மறைவின் வருகை

ஹெமிங்வே கவிதைகள்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து