மதிலுகள்
நீ பீரு தான குடிப்ப, பீருக்கு பன்னிக்கறி தான் நல்லா ஒணத்தியா இருக்கும். கால் கிலோ வறுவல் எம்பது ரூபா தான். ஒயின்சாப்புக்கு போற வழிலயே கடை இருக்கும் பாத்துருக்கேன். நான் பீரு குடிச்ச காலத்துல வாங்கித் திம்பேன். இந்த தடவ வாங்கிட்டு போவோம். எனக்கு ஒரு குவாட்டர் பத்தாதுதான் இருநதாலும் அதுக்கு மேல போனா வீட்டுல கண்டுபுடிச்சுடுவாங்க. டம்ளர் அப்புறம் மத்ததெல்லாம் அந்த செட்டி கடைல வாங்கிக்கலாம். அப்புடியே போற வழில அவள பாத்துட்டு போலாம் என்று ராம் அடுக்கிக் கொண்டே போனான்.
நான்காம் வகுப்பு படிக்கும் போது ஐயனாரப்பன் கோவிலில் பன்றியை ஈட்டியால் குத்தி பலி கொடுத்துவிட்டு அந்த கோவிலைச் சேர்ந்த குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக பன்றியை வளர்த்தவர்கள் வீட்டிலேயே கூறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை "நீங்க இங்க நிக்குறத பாத்தா அப்பா என்னையதான் ஏசுவாரு" என்று பன்றியை வெட்டிக் கொண்டே முனுசாமி சொன்னார்.
நான் அந்த தெருவுக்கு சென்றதை அப்பாவிடம் யார் முன்னிலையிலாவது பார்த்தவர்கள் வந்து கூறினால், அம்மாவும் என்னுடன் சேர்ந்து அப்பாவிடம் ஏச்சு வாங்க வேண்டி வரும். முனுசாமி வீடு என்றால் எப்போதாவது மட்டும் கடமைக்கு ஏச்சு விழும். முனுசாமி காதல் திருமணம் செய்து கொண்டு வந்த போது மேலோட்டமாக பார்க்க அப்பா அவனை கடுமையாக பேசினாலும் அவர்தான் பெண் வீட்டுக் காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாக சொல்லுவார்கள். தவிர பெண் வீட்டுக்காரர்கள் மேல் சாதியினராக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த ஊரில் சிறுபான்மையினராகவும் வசதி குறைந்தவர்களாகவும் இருந்ததனால் தான் வேறு வழியின்றி அப்பாவின் பேச்சுக்கிணங்கி அமைதியாகச் சென்றனர். முனுசாமியின் மனைவி சரோஜாவிடம் பேசும் போது அந்த பகுதியிலிருப்பவர்களிடம் தன்னிச்சையாக ஒரு மரியாதை வந்து விடுவதை அவளும் ரசித்தாள். என் அப்பாவினால் அவள் காதல் கைகூடியதால் என் மேல் அவளுக்கு தனி பிரியம். முனுசாமியின் சகோதரர்கள் எங்கள் வீட்டிலும் வயலிலும் வேலை செய்தாலும் பன்றி வளர்பிலும் ஈடுபடுகின்றனர். முனுசாமி அப்போதே படித்து ஊரின் பஞ்சாயத்து ஆபீஸில் எழுத்தராக பணி புரிந்தார். சகோதரர்களுடன் சேர்ந்து வேலியிட்டு பன்றிகள் வளர்த்து கோவில்களுக்கும் இறைச்சி கடைகளுக்கும் தருவது உண்டு.
மொத்தம் முப்பத்தேழு கூறுகள் இருந்தன. வெட்டி வைக்கப்பட்ட கறியிலிருந்து இரண்டு துண்டுகளை எடுத்துக் கொண்டு முத்துப் பாட்டா வீட்டு சந்து வழியாக புகுந்து ஏரிக் கரையை சுற்றிக் கொண்டு பன்னீர் செட்டியாரின் தோப்பைக் கடந்து வீதியில் புகுந்து ராமின் வீட்டை அடைந்தேன். "கண்ணு கண்ணு" என்று அழைத்துக் கொண்டே என் பின்னால் முனுசாமி வருவது ஏரிக்கரை வரை கேட்டது. நிக்கரின் பையில் கை விட்டுக் கொண்டு வந்த என்னைப் பார்த்ததும் வாசலில் நின்று கொண்டிருந்த ராமின் அம்மா வீட்டின் உள்ளே பார்த்து உன் கூட்டாளி வராரு என்றாள். ராம் கையில் மாங்காயுடன் ஓடி வந்தான். பின் இருவரும் பக்கத்திலிருக்கும் மாரியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டோம். ராம் மாங்காயை உடைக்க முனைந்த போது நிக்கரிலிருந்து கையை எடுத்து உள்ளங்கையில் வைத்திருந்த இரண்டு இறைச்சித் துண்டுகளில் ஒன்றை அவனுக்குக் கொடுத்தேன்.அவன் கையில் வாங்கி பார்த்துவிட்டு என்னது என்றான். நான் பதில் சொல்லாமல் வாயிலிட்டு மென்று விழுங்கிவிட்டு, இது மலைத் தேங்கா. இனிக்காது. சாப்புட்டா ஐயனாரப்பன் பவரு வரும் என்றேன். நான் மென்ற போது தேங்காய் போலத் தான் இருந்தது. ராமும் வாயில் போட்டு மெல்லும் போது அவனுக்கு குமட்டுவது போல் வரவும் கோவில் திண்ணையிலிருந்து வெளியே துப்பினான். அது டைகர் பக்கத்தில் விழவும் அது முகர்ந்து பார்த்துவிட்டு தின்றது.
ஒன்னோட ஒடம்பு அந்த பவர தாங்காது. அதான் துப்பிட்ட.
ஓவொடம்பு மட்டும் தாங்குமா
பவரு வந்துடுச்சி வேணுமின்னா பாக்குறியா என்று வெளியே ஓடிச் சென்று பெரிய கல்லொன்றைத் தூக்கி புதரில் எறிந்தேன். கண்ணாடி பாட்டில் நொறுங்கும் ஓசை கேட்டது. ஒன்னால இந்த கல்ல தூக்க முடியுமா?
அவன் முகம் முடியாது என்பதை ஒத்துக் கொள்வது போல் இருந்தது.
_____________________________
அவள பாத்துட்டு போலாம்னு சொல்றியே, உன்ன வந்து பாக்க சொல்லி அவுங்கப்பன் வெத்தல பாக்கு வெச்சுட்டு போனாரோ?
வாய மூடுடா
அந்த பிள்ள மொகத்த கவனிச்சிருக்கியா.
ஓ.. வலது கன்னத்துல மச்சம் இருக்கும்.
மயிரான். அன்னை தெரஸா மொகம்டா. அந்த சிரிப்பு. அந்த மாதிரி ஒரு சிரிப்பு வேணும்னா எல்லாரையும் நம்ம ஒறவா பாக்க தெரிஞ்சிருக்கனும்.
ஒறவா? அப்ப அவ உன்ன அண்ணனா பாத்துருக்கலாம்ல.
அடி வாங்காம போக மாட்டனு நெனைக்குறேன்.
எல்லார பாத்தும் அப்புடி உண்மையா சிரிக்கனும்னா மனசு விரிஞ்சு அது நெறஞ்சு இருக்கனும்.
விரிஞ்ச மனசா? பாத்தா அப்புடி தெரியலயே.
ச்சீ. ஓம்மூஞ்சில சாவுற வர அப்படி ஒரு சிரிப்பே வராதுடா என்ற ராம் சீற்றத்துடன் என்னைப் பார்த்தான். கடைசியாக சொன்னது அவனைக் கடுப்பேற்றத்தான் என்றாலும் அப்படி சொல்லியதும் எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
கீர்த்தனாவை குழந்தையிலிருந்தே தெரியும். முனுசாமி சரோஜா தம்பதியின் மகளான கீர்த்தனாவுடன் சிறிய வயதில் ஒன்றாக விளையாடியிருக்கிறேன். எந்த விளையாட்டானாலும் என் அணிக்கு வரவே அவள் விரும்புவாள். அவர்களுடனெல்லாம் சேர்ந்து விளையாடுவது ராம் வீட்டாருக்கு பிடிக்காதென்பதால் அவன் வர மாட்டான். ராம் அவளுடன் பேசியது கூட இல்லை. ஐந்தாவதா ஆறாவதா என்று நினைவிலில்லை அம்மாவின் "நள தமயந்தி" கதை புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று அவளுடன் சேர்ந்து படித்திருக்கிறேன். குறிப்பிட்ட வயது வரை அவள் வீட்டிற்கு சகஜமாக சென்று வந்து கொண்டு தான் இருந்தேன். இப்போது அவள் பெற்றோரை எங்காவது பார்க்கும் போது பேசுவதுடன் சரி.
"இப்பல்லாம் வீட்டுப் பக்கமே வர்றதில்லையே" என்று சரோஜா கேட்பாள்.
கீர்த்தி எங்காவது என்னைப் பார்க்கும் போது நான் தனியாக இருந்தால் மெலிதாய் என்னைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்ப்பாள். உடன் யாரேனும் இருந்தால் அதுவுமில்லை.
நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். இப்போது செவிலியர் படிப்பில் சேர்ந்திருக்கிறாள் என்ற செய்தியால் தான் ராம் அவளை அன்னை தெரஸாவாக கற்பனை செய்திருப்பான். அவள் குணத்திற்கு செவிலியர் பணி தகுந்தது தான் என்று எனக்கும் தோன்றியது. அவள் சிரிப்பும் ராம் சொல்வது போல் தான் இருக்கும். மதிலுகள் படத்தில் வரும் மம்முட்டியின் சிரிப்பைப் போல. திடீரென்று கொஞ்ச நாட்களாக ராம் அவளைப் பற்றி பேசுவதும் பார்க்கச் செல்வதுமாக இருந்தான். அப்போதெல்லாம் தாங்க முடியாத ஏதோ ஒன்று உள்ளத்தில் எழுகிறது. ராமிடம் அவளைப் பற்றி பேச வேண்டாம் அவளை பார்க்க வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்று தோன்றும். ஆனால் ஏன் என்று கேட்டால் என்ன சொல்ல?
நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் நாவல் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் படித்தேன். என்னை பஷீராக கற்பனை செய்து கொண்டு வீட்டில் இருக்கும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். கீர்த்தனாவை நாரயணியாக கற்பனை செய்து கொள்வேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. சிறிய வயதில் எங்கள் வீட்டில் ரோஜா செடி இருப்பதாக கேள்விபட்டு அவள் என்னிடம் கேட்டிருக்கிறாள். நானும் அவளுக்கு ஒரு செடி கொடுத்திருக்கிறேன். அவளுக்கும் வலது கன்னத்தில் மச்சம் இருக்கும். அவள் மேல் அல்லியின் மணம் வீசுவதை நான் உணர்ந்திருக்கிறேன். எங்களுக்கு நடுவிலும் கண்ணுக்கு தெரியாத ஒரு மதில் எப்போதும் இருந்து கொண்டே தான் உள்ளது.
______________________________
அந்த ஞாயிற்றுக்கழமை காலை பதினொரு மணிக்கு பைக்குடன் ராம் வீட்டின் முன் வந்து நின்றான். ஞாயிறென்பதால் பத்தரைக்கு தான் வெள்ளாட்டுக் கறி சாப்பிட்டு முடித்திருந்தேன். வண்டியில் ஏறியதும் இப்ப தாண்டா சாப்புட்டேன் என்றேன்.
நானும் இப்ப தான் சாப்புட்டேன் வா பாத்துக்கலாம்.
சாலையோரமாக ஒரு கடையில் நான்கு மூலைகளில் மூங்கிலை நட்டு அதன் மேல் மரப்பலகைகள் போட்டு நீல நிற தார்பாயை விரித்து பன்றி இறைச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். வெட்டப்பட்ட பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் பன்றி வறுவல் இருந்தது.
ராம் வண்டியிலிருந்து இறங்கி சென்று "கால் கிலோ வறுவல் பார்சல்" என்று நூறு ரூபாய் தாளை நீட்டினான். கடைக்காரருக்குப் பின்னால் சிலர் அமர்ந்து பன்றி வறுவல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களையே கவனிப்பதாக தோன்றியது. அந்த கடைக்கு அந்நியமாக எங்களை உணர்ந்தேன்.
"கடுகு முதலியோட பேரன்" என்று ஒருவர் கிசுகிசுத்தது என் காதில் விழுந்தது. எட்டு வாரிசுகளில் ராமின் தாத்தா கடைசியாக பிறந்ததால் கடுகு என்று அவர் வயதொத்தவர்களால் அழைக்கப்பட்டார். அவனை அடையாளம் கண்டு கொண்டதும் ஏனோ சற்று பயம் வந்தது. எதையும் கவனிக்காமல் ராம் வாங்கிக் கொண்டு வந்ததும் "சரக்கடிக்கிறது யாருக்கும் தெரிஞ்சிடாதுல்ல" என்றேன்.
குடிக்கிறது பீரு இதுல பயம் வேறயா என்று ஏளனமாக சிரித்தான்.
வண்டி கவரில் பொட்டலத்தை வைத்துவிட்டு பக்கத்து ஊர் ஒயின்ஷாப் நோக்கி விட்டான். எங்கள் ஊரில் வாங்குவது அவ்வளவு நல்லதல்ல. போகும் வழியில் தான் அவள் வீடு. அவள் வீட்டருகே சென்றதும் வண்டியின் வேகத்தை குறைத்தான். வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள். எங்களை அவள் பார்க்கவில்லை. வீட்டைக் கடந்ததும் என்னடா உன்ன மாறியே புக்க வச்சிட்டு உக்காந்துருக்கா என கேட்டான். நான் எதுவும் சொல்லவில்லை. அவள் புத்தகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்க்க மனதிற்கு ஏனோ ஆசுவாசமாக இருந்தது. அட்டையை வைத்து ஜான் கிரீனின் "ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்பதை தெரிந்து கொண்டேன். நான் ஆங்கில நாவல் வாசித்து பழக தேர்ந்தெடுத்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. அவளுக்கு மதிலுகள் வாங்கித் தந்து சிறிய வயது போலவே ஒன்றாக சேர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றியது.
போகும் வழியில் செட்டியார் ஒருவர் கடையில் ஒரு பிளாஸ்டிக் கப் இரண்டு ஊறுகாய் இரண்டு சிப்ஸ் பாக்கெட் மற்றும் ஐந்து ஒரு ரூபாய் மிட்டாய்கள் வாங்கிக் கொண்டோம். பீரானாலும் சரக்கானாலும் நான் ஒரு மிட்டாயை வாயில் போட்டுக் கொள்வதுண்டு. ஆரம்பத்தில் கசப்பு சுவை தெரியாமலிருக்க அப்படி செய்தது பின்னாளில் பழகிவிட்டது. பல சமயங்களில் அதற்கு என்னை கேலி செய்வதுண்டு.
ஊரோரமாய் தனிமையில் இருந்த ஒரு சிறிய கட்டிடத்தின் முன்பு சில இருசக்கர வாகனங்கள் இருந்தது. பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் தென்னையோலை படல்களால் சுற்றுசுவரழுப்பி பிளாஸ்டிக் மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. அதன் முன் வண்டியை நிறுத்திவிட்டு ராம் வாங்க சென்றான். நான் சாவியைப் போட்டு வண்டியைத் திருப்பி வைத்தேன். அவன் கையில் ஆரஞ்சு பிளேவர் வோட்காவும் பிளேக் பியர்ல் பீரும் கொண்டு வந்தான். வோட்கா குடிச்சா தான் வாசம் வராது. வீட்ல கண்டு பிடிக்க மாட்டாங்க என்றான். இங்கெல்லாம் நாம் கேட்பது கிடைக்காது. என்ன இருக்கிறதோ அது தான். வண்டியை பக்கத்திலிருந்த ஒரு மாந்தோப்புக்குள் விட்டேன். அதன் முகப்பிலேயே சிலர் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் சற்று உள்ளே சென்றோம். வாங்கிய பொருட்களை எங்கள் இருவருக்கும் நடுவில் வைத்தோம். நான் வாயால் திறந்ததும் அவன் யாருக்கு சியர்ஸ் போடுறது என கேட்டான். அதற்கு அவனே பதில் சொல்வான் என்று தெரியும்.
கீர்த்தனா எனக்கு செட்டாகுறதுக்கு சியர்ஸ் போடுவோம் என்றான்.
நான் அவனிடம் இன்று எப்படியாவது சொல்லிவிடுவது என்று நினைத்தேன். ஆனால் எப்படி என்னவென்று சொல்வது.
அவன் பாதி குடித்துவிட்டு ஒரு துண்டு பன்றிக் கறியை வாயில் போட்டான். நான் குடிக்காமல் யோசித்தபடியே கையில் வைத்திருந்தேன்.
பன்றிக் கறியை வாயில் போட்டு மென்றதும் குமட்டுவது போல் செய்து வாயிலிருந்து குழைந்த எச்சிலுடன் பன்றிக் கறியை துப்பி பாதி வோட்கா நிறைந்த தம்ளரை கீழே வைத்தான். மீண்டும் மீண்டும் எச்சில் துப்பிக் கொண்டிருந்தான்.
வீட்ல வயிறு ஃபுல்லா சாப்டுட்டேன் என்றான். கையிலிருந்த பீர் பாட்டிலை கீழே வைத்துவிட்டு அவன் வைத்த தம்ளரை எடுத்து மடமடவென குடித்துவிட்டு பன்றிக் கறியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்.
அவனைப் பார்த்து செத்தாலும் உனக்கிது செட்டாவாது என்றேன். ராம் ஒன்றும் புரியாமல் உக்கிரத்துடன் இருந்த என்னை பேயறைந்தது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
Comments
Post a Comment