அழைப்பு
கடைசியாக ஒருமுறை ருசியாக வயிறு முட்ட சாப்பிடலாம் என்று நல்ல கடையொன்றை தேடி நடந்தான். அண்டாவை தட்டும் சத்தமும் மசாலாவில் மினுக்கும் பீப்-உம் அதனுடன் இணைந்த பிரியாணி வாசமும் நாவில் எச்சிலை சுரந்தது. அந்த உணவத்தில் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த ஒருசிலரும் பில் கொடுத்துவிட்டு செல்ல இவனும் அங்கு பரிமாறும் சிலரும் மட்டுமே இருந்தனர். அவர்களையும் உள்ளே சென்று சாப்பிட சொல்லிவிட்டு கல்லாவிலிருந்தவர் அவனை நோக்கி வந்து சாப்பிட என்ன வேண்டுமென கேட்டார்.
ஒரு சிறிய பித்தளை பாத்திரத்தில் பிரியாணி அவன்முன் வைக்கப்பட்டது. மணி மூன்றரை ஆகியிருந்தது. முந்தையநாள் மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் பித்தளை பாத்திரத்தில் இருந்த பிரியாணியை ஸ்பூனால் இலையில் தள்ளும் போது கையில் சிறிது நடுக்கம் இருந்தது. ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது ஏதோ நினைவுக்கு வந்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்து சுவரில் ஒட்டியிருந்த விலைப்பட்டியலை கண்டடைந்து கண்களை அதில் ஓட்டினான். பீப் பிரியாணி – ரூ.160.
மிச்சம் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது ரூபாய். பயணத்தொகை போக கையிலிருக்கும் காசை வைத்துக் கொண்டு காசி போய் சேர்வது வரை பிரச்சனையில்லை.
காசிக்கு நேரடியாக செல்லும் ரயில் இன்னும் ஒரு வாரம் கழித்து தான். சென்னைக்கு சென்றால் அங்கிருந்து எப்படியேனும் எங்கேனும் போய்விடலாம். நான்கரை மணிக்கு தான் சென்னை ரயில். முதல் நடைமேடையில் முன்பதிவு செய்யாத செகண்ட் கிளாஸ் பயணிகளுக்கான கோச் வந்து நிற்கும் கடைகோடிக்கு சென்று அமர்ந்தான். வார நாளின் மதியவேளையானதாலும் சற்று முன்பு தான் ஆலப்புழாவுக்கும், நாகர்கோவிலுக்கும், ஜார்கண்டிற்கும் செல்லும் ரயில்கள் போனதாலும் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஆளில்லாத நடைமேடையின் கோடியில் தன்னிரக்கத்தில் கண்ணீர்வடிக்க ஏதுவான ஒரு இடத்தில் அமர்ந்தான். ஆனால் அவனே ஆச்சர்யபடும் விதத்தில் ஒரு பரவசவுணர்வு மட்டுமே இருந்தது. ஒரு சாகசக்காரனின் மனநிலையில் இருந்தான்.
ரயில் வந்ததும் தன்னைப்போலவே முன்பதிவு செய்யாத சிலர் ஏறிய ஒரு பெட்டியில் அவனும் ஏறினான். ஏறிய பின்பு தான் அது செகண்ட் கிளாஸ் பெட்டிக்கு அடுத்துள்ள முன்பதிவு செய்தவர்களுக்கான பெட்டி என்பதை உணர்ந்தான். அவர்களோடு சேர்ந்து படிக்கட்டின் அருகில் அமர்ந்தான். பரிசோதகர், அவனும் மற்ற பிற செகண்ட்கிளாஸ் ஆட்களும் அங்கு இருப்பதையே அறியாதவர் போல கடந்து சென்று முன் பதிவு செய்தவர்களின் பயணச்சீட்டை பரிசோதித்துவிட்டு மீண்டும் அவனைத் தாண்டி சென்றதை கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியில் வந்த குண்டு பெண்மணி அவனருகில் இருந்த வாஷ் பேசினில் முகம் கழுவி வாய் கொப்பளித்தாள். சில நீர்த்துளிகள் அவன் உதட்டிலும் கன்னத்திலும் தெறித்தன. தான் காட்சி அளித்துக்கொண்டிருந்த ஒரு உலகத்திலிருந்து அவன் இதுவரை கண்டிராத இன்னொரு உலகுக்கு வந்துவிட்டதாய் தோன்றியது. அப்போதுதான், தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என அவனுக்கு முழுமையாக புரிந்தது. வீட்டையும் இதுவரையிலான அவனது இருபத்தியொரு வருட வாழ்க்கையையும் மொத்தமாக துறந்துவிட்டு வெளியேறுவது ஒன்றும் அவன் நினைத்த அளவு எளிதல்ல என்று தோன்றியது.
காசிக்கு போய்விட்டால் உணவுக்கு பஞ்சமிராது. பகலில் எங்காவது உறங்கிவிட்டு இரவில் அங்கு வீடில்லாமல் அலைபவர்களும் துறவிகளும் என்ன செய்கிறார்கள் என்பதை இரண்டு மூன்று நாள் நோட்டம் விட்டால் தங்குவதற்கு ஒரு வழி கிடைத்துவிடும். மலிவு விலையில் சில காவி வேட்டிகளை வாங்கிக் கொண்டால் உடைக்குப் பஞ்சமில்லை சாப்பாடும் எளிதில் கிடைக்க வழிசெய்துவிடும் என்று பல கணக்குகளுடன் ரயிலேறியிருந்தான். அவன் பையில் இரண்டு டி ஷர்டுகளும் ஒரு பேண்ட்டும் சில உள்ளாடைகளும் இருந்தது. எப்போதும் அவனது திட்டமிடல்களுக்கும் அதன் நடைமுறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருக்கிறான். திட்டமிடும் போது அவனும் திட்டமும் மட்டும் தான். நடைமுறையில் அவ்வாறு இல்லை. அவன் இதுவரை காசிக்கு சென்றதில்லை. தமிழ்நாட்டைத் தாண்டி திருப்பதிக்கும் பெங்களூரில் அவன் உறவினர் வீட்டிற்கும் சென்றிருக்கிறான். முதன்முறையாக ஒரு அச்சம் அவனுள் எழுந்தது. அவனுடன் அமர்ந்திருந்தவர்கள் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஜோலார் பேட்டையில் இறங்கினர். இப்போது அவன் மட்டும் தனித்து அங்கு அமர்ந்திருந்தது அந்த அச்சத்தை கூட்டியது.
சற்றென்று இறங்கி இரண்டாம் வகுப்பை நோக்கி ஓடினான். இரண்டு காலையும் ஊன்றுவதற்கு இடம் கிடைத்தாலே பெரிதென தோன்றியது. கிடைத்த இடங்களில் உடலை நுழைத்து விதவிதமான கோணங்களில் படுத்திருந்தனர். அங்கு சென்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டாலே சிறிது நேரத்தில் படுத்து உறங்குமளவு இடம் தானாக உருவாகி வருவதையும் கண்டுகொண்டான். பதினொரு மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில் அரைமணிநேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது. பயணச்சீட்டு எடுத்துவிட்டு காசிக்கு செல்லும் ஏதேனும் வண்டியில் ஏறி படுத்துக்கொள்ளலாம் என்று போனான். காசிக்கு நேரடியான வண்டியில்லை எனவும் தீன்தயாள் உபத்தியாய நிலையத்தில் இறங்கி, தொன்னூறு ரூபாயில் காசிக்கு இரண்டுமணி நேரத்தில் ரயிலில் சென்றுவிடலாமென்றும் தீன்தயாள் உபத்தியாய செல்லும் ரயில் சரியான நேரத்திற்கு வந்தால் அடுத்தநாள் மதியம் இரண்டரைக்கு சென்னையிலிருந்து எடுப்பார்கள் என்றும் பயணச்சீட்டு வாங்க நாளை மதியம் வரவும் என்றும் கடுகடுப்புடன் கூறப்பட்டது. இவ்வளவு துல்லியமான தகவல்களை இவ்வளவு கடுகடுப்புடன் கூறிய அந்த பயணச்சீட்டு தருபவரை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனை தோளால் இடித்து ஒதுக்கிவிட்ட ஆள் அவரிடம் இந்தியில் ஏதோ கேட்க அந்த கடுகடுப்பு எஞ்சின் மீண்டும் புகைவிட ஆரம்பித்தது.
காலை ஐந்து மணிக்கு எழுந்து சென்ட்ரலிலேயே கட்டண கழிப்பிடத்தில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தவன் சூரிய உதயத்தில் கடற்கரையை அடைந்தான். காலை உணவை கைவிட்டு பல மாதங்கள் ஆகியிருந்தது. கடைசியாக அவனது அம்மா இறப்பதற்கு முந்தைய நாள் காலையுணவு சாப்பிட்டது. இதுவரையிலான தனது வாழ்க்கையை நினைவில் ஓட்டிக் கொண்டு வெறுமனே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். பத்து மணிக்கு மேல் கடற்கரையை ஒட்டிய சிறு பூங்கா போன்ற இடத்தில் வெறுமனே படுத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். அங்கு சென்று ஒரு மரத்தின் கீழ் உப்பு படிந்த உடலுடன் அமர்ந்தான். பழுப்பு நிற பறவை ஒன்று அவனருகில் வந்து புல்வெளியில் நடந்தது. அது ஏதோ ஒரு வகையில் அம்மாவை நினைவூட்டியது. அதனுடன் பேசத் தொடங்கினான்.
ஏய் நாந்தான் கார்த்தி. இன்னும் ஒன்னரை நாள்ல காசில இருப்பேன். நீ எங்க போக போற? நீ போற இடத்துக்கு நானும் வரவா?
இதென்ன கேள்வி என்பது போல் அது அலகை உயர்த்தி அவனைப் பார்த்தது. அலகுக்குக் கீழ் கழுத்தில் நீல வண்ணம் இருந்தது.
நான் எங்க போறேன்னு உன்னத்தவிர யார் கிட்டயும் சொல்லல. நீ எங்க போறன்னு சொல்ல மாட்டியா?
மீண்டும் ஒரு முறை அது இதென்ன கேள்வி என்பது போல அவனைப் பார்த்து விட்டு, ஆகாசத்திற்கு தான், நீயும் வா.. என சொல்லிக்கொண்டே விண்ணில் பாய்ந்தது.
அதை அவன் நிமிர்ந்து பார்த்த போது கரிய மெலிந்த தேகமும் காவியா மஞ்சளா என்று பிரித்தறிய முடியாத மங்கிய வேட்டியும் கழுத்தில் ருத்திராட்சமும் இன்னும் சில மாலைகளும் அணிந்திருந்தவர் அவன் முன் வந்தார்.
அவனைப் பார்த்து ‘நீலகண்ட பறவ’, அத இங்க இதுவரைக்கும் பாத்ததில்ல என்று புன்னகைத்தார்.
அவனும் புன்னகைப்பது போல் உதட்டை வளைத்துவிட்டு அவரையே பார்த்தான். அவர் அவன் அருகில் அமர்ந்துகொண்டார்.
நீ எங்க போற?
ஒருகணம் அமைதியாக இருந்துவிட்டு, காசிக்கு என்றான்.
காசிக்கு போயி?
என்னைய யாருக்கும் தெரியாத எடத்துக்கு போகனும்.
இங்க மட்டும் உன்ன யாருக்கு தெரியும்? இல்ல அங்க போனா உன்னைய யாருக்கும் தெரியாதுனு நெனைக்குறியா?
அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை.
நான் காசிக்கு போவேன் என்று ஒரு குழந்தையைப் போல சொன்னான்.
அவர் புன்னகைத்தார்.
அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு நீங்க நாடோடியா என்றான்.
நீ நாடோடின்னு சொல்லும் போது உங்கிட்ட இருந்து அந்நியபடுற மாதிரி இருக்கு. வேணும்னா ஊர்சுத்தின்னு வெச்சுப்போம்.
வீட்டைவிட்டு கிளம்பியதிலிருந்து அவன் முதல்முறையாக புன்னகைத்தான். பின்பு தன்னியல்பாக அவனைப் பற்றியும் அவனது பயணதிட்டத்தையும் சொல்லத் தொடங்கினான்.
நீங்க எங்க போறிங்க?
எந்த திட்டமும் இல்ல. உனக்கு அடுத்த ரயிலிலே ஏறி காசி வந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்ல.
பின்பு மணியைப் பார்த்துவிட்டு இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று விடைபெற்றான்.
சிறிது தூரம் நடந்தவன் பேருந்து நிறுத்தத்தைக் கண்டதும் பேருந்திலே ரயில் நிலையத்திற்கு போகலாமென முடிவெடுத்தான். பேருந்தில் ஏறியதும் டிக்கெட் எடுப்பதற்காக பின்பக்க பாக்கெட்டைத் தொட்டபோது பர்சை காணவில்லை. ஏறிய விசையிலேயே நகரத்தொடங்கிய பேருந்திலிருந்து இறங்கினான். அவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பதற்றத்துடன் சென்றான். அங்கே அவன் கிளம்பும் போது இருந்த எவரும் இல்லை. பர்சும் இல்லை.
காலையில் எழுந்ததிலிருந்து அவன் பர்சை எடுத்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்கவில்லை. கடைசியாக பர்சை எப்போது பார்த்தோம் என்று நினைவு கூர்ந்ததான். இரவு படுத்திருக்கையில் பின்னால் பர்ஸ் அழுந்தியது நினைவில் வந்தது. கழிப்பிடத்தில் பர்சை எடுக்காமல் பையில் சில்லறைகளை வைத்திருந்த உறையிலிருந்து பத்து ரூபாய் நாணயத்தை தான் எடுத்துக் கொடுத்திருந்தான். கடற்கரை புல்வெளியில் வந்து அமர்ந்தபோது நிச்சயம் பர்ஸ் இல்லை. இருந்திருந்தால் அமர்ந்த போது உணர்ந்திருப்பான். கழிவறையிலேயே பேண்ட் போடும் போது அதில் பர்சை பார்த்தவாறு நியாபகம் இல்லை. சென்ட்ரலை நோக்கி தணியாத பதற்றத்துடன் ஓட்டமும் நடையுமாக சென்றான். அவன் படுத்திருந்த இடங்களில் தேடினான். நள்ளிரவில் அவன் உறங்கிக் கொண்டிருக்கும் போது யாராவது எடுத்து சென்றிருக்கலாம். ஆனால் அது ஒரு ஊகம் தான். யாரிடம் சென்று இதை சொல்வது. சொன்னாலும் கிடைக்கப்போவதில் எந்த நிச்சயமும் இல்லை.
பர்ஸ் தொலைந்துவிட்டது இனி கிடைக்காது என்ற எண்ணத்தை உறுதியாக உணர்ந்த போது பதற்றம் மெல்ல குறையத்தொடங்கிய விந்தையை உணர்ந்தான். காசிக்கு போக டிக்கெட் எடுக்க பணம் கிடைத்தால் போதும். காசிக்கு சென்றுவிட்டால் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனில் தோன்றியது. யாரிடமாவது கொஞ்சநாளில் திருப்பி அனுப்பிவிடுவதாக கடனாக கேட்கலாமா?. ஆனால் காசிக்கு சென்றபின் அந்த வேளை உணவைத்தவிர வேறெதையும் சேமித்து வைக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தான். டிக்கெட் எடுக்காமல் அவ்வளவு தூரம் நிச்சயம் பயணிக்க முடியாது. நண்பர்களிடமோ உறவினர்களிடமோ உதவி கேட்பதையும் வீட்டிற்கு திரும்பிச் செல்வதையும் அவனால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படியே திரும்பிச் சென்றாலும் அவனை மகிழ்வுடன் வரவேற்க யாருமில்லை. டிக்கெட் கவுண்ட்டரில் அதே கடுகடு எஞ்சின் இருந்தால் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் ஆனால் வேறொரு இளம்பெண் அந்த இடத்தில் இருந்தாள். தன்னைக் கடந்து சென்றவர்களிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறி பணம் கேட்கலாமென முடிவுக்கு வந்தான். சென்ட்ரல் ரயில் நிலைய பரபரப்பில் நின்று அவனைக் கேட்க ஒருவரும் தயாராக இல்லை. சற்று நேரம் கழித்து வெறுமனே அங்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகங்களை எந்த உணர்ச்சியுமின்றி பார்த்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான். தனக்கு எதிரே தெரிந்த கடிகாரத்தில் இரண்டு மணி பத்து நிமிடங்களாகியிருந்தது. அவனது ரயில் சரியான நேரத்திற்கு வந்துவிட்டதை ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இருபது நிமிடங்களில் கிளம்பிவிடும். அனைத்தினாலும் கைவிடப்பட்ட நிராதரவான நிலையில் கண்ணீர் ததும்பியது. அதை அடக்க நினைத்த போது தொண்டையில் மூச்சு அடைபட்டு எழுந்த மெல்லிய கேவலை கேட்டு அவனே கூசினான். கண்கள் இருண்டு வந்தது. மேலும் யாரிடமாவது கேட்கலாமா என்று தோன்றிய எண்ணத்தை நினைத்து அருவருப்படைந்தான். இருந்தாலும் வேறு வழியில்லை. மொத்த சுயமரியாதையையும் இழக்கத் தயாராகி கோட்சூட் போட்ட ஒருவரை நோக்கி கைநீட்டினான் வார்த்தைகள் எழவில்லை.
டேய் குட்டிப்பயலே... ஏய்...
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான். அந்த ஊர்சுற்றி தான் அவனை அழைத்துக்கொண்டிருந்தார். எந்த எண்ணமுமில்லாமல் துடைக்க துடைக்க மேலும் கண்ணீர் வழிய அவரருகில் சென்றான்.
நீ போறதா சொன்ன ரயில் பிளாட்பார்மில வந்து நிக்குது. இங்க என்ன பண்ற?
அவன் படுத்திருந்த இடத்தை சுட்டிக்காட்டி பர்ஸ்.. டிக்கெட்... என்று தேம்பிக் கொண்டே வார்த்தைகளை சொற்றொடராக்க முடியாமல் திணறினான்.
உன்ன காலைல நீலகண்டன் வரசொல்லிட்டு போனான்ல.. இவனுங்க கிட்ட நீ என்னத்த கேட்டுட்டு இருக்க.. நீ நேரத்துக்கு போலனா அவன் ஏமாந்து போய்ட மாட்டானா? சரி வா போவோம் என அவர் அவசரமாக நடந்தார். கண்களைத் துடைத்துக் கொண்டு அவனும்.
Comments
Post a Comment